புலியகுளத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார் மயூரா ஜெயக்குமார்

கோவை,ஏப்.5:கோவை தெற்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். இறுதி கட்ட பிரசாரமாக அவர் நேற்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். சிவானந்த காலனியில் தனது பிரசாரத்தை துவங்கியவர் டவுன்ஹால், செட்டி வீதி, பூமார்கெட் உள்பட தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 19 வார்டுகளுக்கும் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார். இறுதியாக புலியகுளத்தில் பிரமாண்ட பேரணியுடன் தனது தேர்தல் பிரசாரத்தை முடித்தார். அப்போது கை சின்னத்தில் வாக்களிக்கும்படி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பிரசாரத்தின் போது,  காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கோவை எம்.பி., பி.ஆர். நடராஜன், தபெதிக கு.ராமகிருஷ்ணன், மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், வக்கீல் அருள்மொழி,சேதுபதி, கணபதி செல்வராஜ், ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றேனர்.

பிரசாரத்தில் தினேஷ் குண்டுராவ் பேசுகையில், “நான் இந்த சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். இதில், திமுக தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெறும் என்பதை பார்க்க முடிந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பது நூறு சதவீதம் உறுதி. அதே போல், கோவை தெற்கு தொகுதியில் மயூரா ஜெயக்குமார் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் உங்கள் தொகுதி மேம்பட குரல் கொடுக்க உள்ளார்” என்றார்.  பிரசாரத்தின் போது மயூரா ஜெயக்குமார் பேசுகையில், “கோவை தெற்கு தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை பெரும்பான்மை ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். திமுக ஆட்சி வந்தவுடன் தெற்கு தொகுதியில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் உடனடி தீர்வு காணப்படும். இந்த தொகுதியில் போட்டியிடும் பிற வேட்பாளர்களை இனிமேல் உங்களால் பார்க்க முடியாது. ஆனால், என்னை மக்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். உங்களின் பிரச்னைகளை தெரிவிக்கலாம். நான் இந்த மண்ணின் மைந்தன். உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்ற உள்ளேன். அதற்கு ஒரு வாய்ப்பினை அளியுங்கள்” என்றார்.

Related Stories: