வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சித்திரை பிரமோற்சவ சுவாமி வீதியுலா வாகனங்களுக்கு வர்ணம் பூச்சு

வேலூர், ஏப்.1: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் சுவாமி வீதியுலா வரும் வாகனங்களுக்கு வர்ணம் பூச்சும் பணி தீவிரமடைந்துள்ளது.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரமோற்சவ விழாவும், அதையொட்டி நடைபெறும் புஷ்பப்பல்லக்கு விழாவும் பிரசித்தி பெற்றவை. சித்திரை பவுர்ணமிக்கு முதல் 10 நாட்கள் ஒவ்வொரு நாளும் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இருந்து காலையும், மாலையும் உற்சவ மூர்த்திகள் வீதியுலா நடைபெறும். இதற்காக காமதேனு வாகனம், கற்பக விருட்ச வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், நந்தி வாகனம், சிம்ம வாகனம், ராவணேசுவர வாகனம் என வாகனங்களில் உற்சவர்கள் வீதியுலா வருவர்.

சித்திரை பவுர்ணமியன்று நூதன புஷ்பப்பல்லக்கில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் பரிவார தெய்வங்களுடன் உலா வருகிறார். அவரை தொடர்ந்து வேலூரில் சேண்பாக்கம் செல்வ விநாயகர், தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் கோயில், அரசமரப்பேட்டை பெருமாள் கோயில், லாங்கு பஜார் வேம்புலியம்மன் கோயில், வாணியர் வீதி கனக துர்க்கையம்மன் கோயில், ஆனைகுளத்தம்மன் கோயில் என 7 புஷ்பப்பல்லக்குகளும் உலா வருகின்றன.

சித்திரை பிரமோற்சவ விழாவுக்காக வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உற்சவ மூர்த்திகள் வீதியுலா வரும் அனைத்து வாகனங்களும் புத்தம்புது வர்ணம் பூசப்பட்டு தயாராகி வருகின்றன.

Related Stories: