வாலாஜாபாத் ஒன்றியம் தாங்கி ஊராட்சியில் சீரமைத்த 2 ஆண்டில் கரைகள் உடைந்த பிச்சை நாயக்கன் குளம் : மீண்டும் முறையாக சீரமைக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத், மார்ச் 31: தாங்கி ஊராட்சியில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான பிச்சைநாயக்கன் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

வாலாஜாபாத் ஒன்றியம் தாங்கி ஊராட்சியில், 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சி காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையை ஒட்டி அமைந்துள்ளது. மேலும், இந்த சாலையை ஒட்டி பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட மிகவும் பழமையான, பிச்சைநாயக்கன் குளம் உள்ளது.  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு சார்பில், பிச்சைநாயக்கன் குளத்தில் குடிமராமத்து பணி நடந்தது. அப்போது, குளத்தை ஆழப்படுத்தி, 4 கரைகளும் பலப்படுத்தப்பட்டன. ஆனால், அதை முறையாக செய்யாததால்,  கரைகள் அனைத்தும் தற்போது ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சரிந்து காணப்படுகின்றன. அரசு ஒதுக்கிய நிதியை, அதிகாரிகள் கையாடல் செய்து, தரமான பணிகள் மேற்கொள்ளாததால், இதுபோன்று குளம் இடிந்து விழும் நிலையில் உள்ளது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் வாலாஜாபாத் ஒன்றியம் தாங்கி ஊராட்சியில், பிச்சைநாயக்கன் குளம் அமைந்துள்ளது. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், குளத்தை தூர்வாரி கரைகள் முழுவதும் பலப்படுத்தப்பட்டன. பின் பெய்த மழையால், தண்ணீர் நிரம்பி குளத்தில் தெப்ப உற்சவங்களும் நடந்தன. இதனை காண, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வந்தனர். அவர்கள், தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். இந்நிலையில், இந்த குளத்தின் கரைகள் முழுவதும் ஆங்காங்கே பலமின்றி சரிந்து, விரிசல்கள் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. வரும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் வெளியேறினால், ஆண்டுதோறும் நடைபெறும் தெப்ப உற்சவம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலர்களிடம், சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை கண்டு கொள்ளாமல் மெத்தனபோக்கில் உள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம், உடனடியாக இந்த குளத்தை ஆய்வு செய்து, குடிமராமத்து பணியில் எவ்வளவு நிதி வழங்கப்பட்டது. அதில், செலவு எவ்வளவு ஆனது, முறையாக பணிகள் நடந்துள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். கையாடல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், மீண்டும் கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து பாரம்பரிய குளத்தை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

Related Stories: