கோவை புத்துணர்வு முகாமுக்கு சென்று வந்த படவேடு ராமர் கோயில் யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜை: முகாமில் 150 கிலோ எடை கூடியது

கண்ணமங்கலம், மார்ச் 29: கோவை தேக்கம்பட்டியில் நடந்த புத்துணர்வு முகாமுக்கு சென்று வந்த படவேடு ராமர் கோயில் யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜை செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், யானைகள் புத்துணர்வு முகாம் கடந்த 2003ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடத்தப்படுகிறது. இம்முகாம், கோயில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலை போக்கவும், யானைகள் ஓய்வெடுக்கவும், புதுதெம்பு பெறவும், மருத்துவ கவனம் செலுத்தவும் வாய்ப்பளிக்கின்ற ஏற்பாடு ஆகும்.

அதன்படி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியம் தேக்கம்பட்டி ஊராட்சியின் பவானி ஆற்றுப்படுகையில் ஆண்டுதோறும் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 6 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இம்முகாமில் பாகன்கள் தங்கும் இடம், ஓய்வு அறை, தீவன மேடை, சமையல் கூடம், யானைகளை குளிக்க வைப்பதற்காக ஷவர்பாத், பாகன்கள் மற்றும் யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை நிலையம், முகாமில் பங்கேற்கும் யானைகள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக 3.4 கி.மீ தூரமுள்ள நடைபாதை ஆகியன இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், தேக்கம்பட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி யானைகள் புத்துணர்வு முகாம் நடந்தது. இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், படவேடு ராமர் கோயில் யானை லட்சுமி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம்(27ம் தேதி) முகாம் முடிந்த நிலையில், அங்கிருந்து புறப்பட்ட யானை லட்சுமி நேற்று காலை 6 மணியளவில் படவேடு வந்து சேர்ந்தது.

இதையடுத்து, கோயில் செயல் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் பக்தர்கள், யானைக்கு சிறப்பு பூஜை செய்து வரவேற்றனர். அப்போது, கால்நடை மருத்துவர் பெரியசாமி, கோயில் மேலாளர் மகாதேவன் மற்றும் பக்தர்கள் உடனிருந்தனர்.

புத்துணர்வு முகாமிற்கு சென்றபோது 4,200 கிலோ இருந்த யானை லட்சுமி தற்போது 150 கிலோ அதிகமாகி 4,350 கிலோவுடன் ஆரோக்கியமாக இருப்பதாக செயல் அலுவலர் தெரிவித்தார்.

Related Stories: