பங்குனி தேர் திருவிழாவையொட்டி உறையூரில் கமலவல்லி நாச்சியாருடன் நம்பெருமாள் சேர்த்தி சேவை

திருச்சி, மார்ச் 26: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன்பின் நம்பெருமாள் கடந்த 21ம் தேதி இரவு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் 5ம் நாளான நேற்று முன்தினம் (24ம் தேதி) நம்பெருமாள் சேஷ வாகனத்திலும், கற்பவிருட்சக வாகனத்திலும் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தார்.

நேற்று (25ம் தேதி) நம்பெருமாள் அதிகாலை 3.30 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து தங்க பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் மகாஜன மண்டபத்துக்கு 11 மணிக்கு சென்றடைந்தார். 12 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நாச்சியார் கோயில் முன்மண்டபம் சேர்ந்தார். பகல் 1.15 மணிக்கு முன் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கமலவல்லி நாச்சியாருடன் மதியம் 2 மணி முதல் நேற்று இரவு 12 மணி வரை சேர்த்தி சேவை கண்டருளினார்.

இன்று அதிகாலை 1.30 மணிக்கு சேர்த்தி மண்டபத்தில் புறப்பட்டு வெளி ஆண்டாள் சன்னிதியில் மாலை மாற்றி கொண்டு அதிகாலை 4 மணிக்கு கண்ணாடி அறை வந்து சேர்ந்தார். விழாவின் 9ம் நாளான வரும் 28ம் தேதி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடக்கிறது. பங்குனி தேரோட்டம் வரும் 29ம் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணு சீனிவாசன், ரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி செய்து வருகின்றனர்.

Related Stories: