கொடைக்கானலில் சிலுவைப்பாதை திருப்பயணம்

கொடைக்கானல், மார்ச் 22: கொடைக்கானலில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் ஏராளமானோர் சிலுவையை சுமந்தபடி சென்றனர்.இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டு மரித்ததன் நினைவாக ஆண்டுதோறும் தவக்காலம் என்னும் உண்ணா நோன்பு விரதத்தை கிறிஸ்தவர்கள் மேற்கொள்வார்கள். 40 நாட்கள் தவக்காலம் அனுசரிக்கப்படும். இதில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை மற்றும் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெறும். நேற்று கொடைக்கானல் வட்டார அனைத்து ஆலயங்களின் சார்பாக வட்டார திருயாத்திரை மற்றும் சிலுவைப்பாதை நடந்தது.

கொடைக்கானல் மூஞ்சிக்கல் திருஇருதய ஆலயத்தில் துவங்கிய இந்த சிலுவை பாதை திருப்பயணத்தை கொடைக்கானல் வட்டார அதிபரும் மூஞ்சிக்கல் பங்கு தந்தையுமான எட்வின் சகாய ராஜா துவக்கி வைத்தார். இந்த சிலுவைப்பாதையில் இயேசுவின் பாடுகளை தியானித்த வண்ணம் ஆயிரக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் முக்கிய வீதிகள் வழியாக சிலுவையை சுமந்த வண்ணம் சென்றனர். சலேத் மாதா ஆலயத்தை இந்த ஊர்வலம் சென்றடைந்தவுடன் அங்கு சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. இந்த பூஜையில் கொடைக்கானல் வட்டாரத்தைச் சேர்ந்த பங்குத்தந்தையர்கள் ஏஞ்சல், சேவியர் அருள் ராயன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் அன்னதானம் நடந்தது.

Related Stories: