வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன்: எஸ்.ஆர்.ராஜா பிரசாரம்

சென்னை, மார்ச் 20: தாம்பரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘தாம்பரம் தொகுதியில் பட்டா வழங்கும் தனி அலுவலகம் அமைத்து ஏழை, எளிய மக்கள் 35 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கி இருக்கிறேன். தாம்பரம் தாலுகா அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மேற்கு தாம்பரத்தில், துணை மின் நிலையம், சானடோரியம் பகுதியில் நீதிமன்றம், தாம்பரம் மற்றும் சிட்லபாக்கத்தில் மேம்பாலங்கள், தாம்பரத்தில் இருக்கின்ற பேருந்து நிலையம் என அனைத்தும் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

இது போன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்கள்  தாம்பரம் தொகுதிக்காக திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளது. திமுக ஆட்சியில், 2009ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. 2006 - 2011ல் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சிட்லபாக்கம், செம்பாக்கம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், மாடம்பாக்கம் பாதாள சாக்கடை திட்டங்கள் அதிமுக ஆட்சிகாலத்தில் நிறுத்தப்பட்டு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. அதிமுக ஆட்சியில், இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடை பெறாமல் இருப்பதாலும், தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருந்தால், இந்நேரம் பல்வேறு வளர்ச்சி பணிகள் தாம்பரம் பகுதியில் நடைபெற்று இருக்கும்.

எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்து அதிமுக அரசால் தடைபட்ட வளர்ச்சி பணிகள் அனைத்தும் துவங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், தாம்பரம் சட்டமன்ற தொகுதியை, தமிழகத்தில் வளர்ச்சி பெற்ற அனைத்து வசதிகளும் கொண்ட தொகுதியாக மாற்ற, அரசு அலுவலகங்களில் லஞ்ச, லாவண்யம் ஒழித்து அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு இடையூறின்றி கிடைத்திட, தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்’’ இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: