வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பேன் திருவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உறுதி

வத்திராயிருப்பு, மார்ச் 19: வத்திராயிருப்பு அரசு  மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பேன் என்று, திருவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் வாக்குறுதி அளித்தார். திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவ் போட்டியிடுகிறார். வத்திராயிருப்பு ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, திமுக மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் குன்னூர் சீனிவாசன்  உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் சமுதாய பிரமுகர்களை சந்தித்து காங்கிரஸ் வேட்பாளர் ஆதரவு திரட்டினார். வத்திராயிருப்பு நகரில் முத்தாலம்மன் திடல், நாடார் பஜார், மேலத்தெரு, கீழத் தெரு உள்ளிட்ட இடங்களில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது வேட்பாளர் மாதவராவ் கூறுகையில், ‘‘வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். வத்திராயிருப்பில் புறவழிச்சாலை அமைக்க பாடுபடுவேன். பிளவக்கல் பெரியாறு கோவிலாறு அணைகளை சுற்றுலா தளங்களாக மாற்றி பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உருவாக்க பாடுபடுவேன். சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய ஏற்பாடு செய்வேன். கைத்தறி நெசவாளர்கள் மேம்பட முயற்சிகளை எடுப்பேன். செங்கல் சூளைக்கு மண் அள்ளுவதற்கு தேவையான வசதிகளை செய்து தருவேன்’’ என்றார்.

Related Stories: