வேலூர், ஆக. 4: காட்பாடி சோதனைச்சாவடியில் பஸ்களில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, வடமாநில வாலிபர் உட்பட 2 பேரை கைது செய்தனர். காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் காட்பாடி போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வேலூர் நோக்கி வந்த ஆந்திரா அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சந்தேகமளிக்கும் வகையில் அமர்ந்திருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் ராணிப்பேட்டை மாவட்டம் கருக்கந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பாரதி வேலு(42) என்பதும், அவரது பையை ஆய்வு செய்தபோது, தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட 5 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிந்து, பாரதி வேலுவை கைது செய்து, அவரிடம் இருந்து 5 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். அதேபோல், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மோதிராம் காஸ்யப்(39). என்பவர் சித்தூரில் இருந்து பஸ்சில் 5 கிலோ குட்கா எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து, மோதிராம் காஸ்யப்யை கைது செய்து, 5 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மொத்தம் 10 கிலோ குட்காவை பறிமுதல் செய்து 2பேரை கைது செய்தனர்.
