ஆடி கிருத்திகையையொட்டி நாளை முதல் 6ம் தேதி வரை திருத்தணிக்கு வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து 900 டிரிப் பஸ்கள் இயக்கம்: அதிகாரிகள் தகவல்

 

வேலூர், ஆக. 3: ஆடி கிருத்திகையொட்டி நாளை முதல் 6ம் தேதி வரை திருத்தணிக்கு வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து 900 டிரிப் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆடி கிருத்திகை விழாவின் போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், முருகனின் அறுபடை வீடு உள்பட பல்வேறு முருகன் கோயில்களுக்கு காவடி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இந்தாண்டு வரும் 5ம் தேதி பரணி காவடியும், 6ம் தேதி ஆடி கிருத்திகையும் நடக்கிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து திருத்தணிக்கு செல்வார்கள்.

இதையொட்டி வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து திருத்தணி முருகன் கோயிலுக்கு நாளை முதல் 6ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, திருப்பத்தூர், ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாளை முதல் திருத்தணிக்கு 900 டிரிப் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து தினமும் திருத்தணிக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆடி கிருத்திகையையொட்டி நாளை முதல் வரும் 6ம் தேதி வரை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் மூலம் 900 டிரிப் இயக்கப்பட உள்ளது. மேலும் பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப திருத்தணிக்கு பஸ்கள் இயக்கப்படும். அதேபோல், வரும் 6ம் தேதி ஆடி கிருத்திகையொட்டி, வள்ளிமலை, ரத்தினகிரி, ஜலகாம்பாறை, கைலாசகிரி சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்’ என்றனர்.

Related Stories: