வேலூர், ஜூலை 31: கழிஞ்சூரில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் குடியிருப்பு அருகே செல்போன் டவர் அமைக்கப்பட உள்ளது. இதனால் பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும். எனவே செல்போன் டவர் அமைக்க கூடாது’ என்றனர். வேலூர் பாலமதி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த மனுவில், ‘குடியாத்தத்தை சேர்ந்த ஒருவர் எனக்கு நண்பர் மூலம் அறிமுகமானார். அவர் என்னிடம் இயந்திரத்தில் முதலீடு செய்தால், லாபம் தருவதாக கூறி ரூ.5லட்சம் பெற்றார். ஒரு மாதம் கழித்து பணத்தை லாபத்துடன் திருப்பி தருவதாக கூறினார். அதில் ரூ.2.85லட்சம் கொடுத்துவிட்டு, மீதி பணம் கேட்டால் மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்ைக எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும், என்றார்.
வேலூர் சோழவரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், ‘நான் கடந்த 8ம் தேதி வேலூருக்கு வந்திருந்தேன். ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துக் கொண்டு திருமலை- திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் அருகே பஸ் நிறுத்தத்திற்கு சென்றேன். பின்னர், எனது கைப்பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.33 ஆயிரம் பணம், ஆதார், ஏடிஎம் கார்டு மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. பணத்தையும், ஆவணங்களையும் மீட்டு கொடுக்க வேண்டும்’ என்றனர்.
