வேலூர், ஆக.3: மருத்துவக்கல்லூரிகளில் உள்ள போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மூலம் மாணவர்களிடையே போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ரயில், பஸ், சரக்கு வாகனங்கள் மூலமாக தமிழகத்திற்கு கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்களை கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க தமிழக காவல்துறை, ரயில்வே போலீசார், உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறையினர் ஒன்றிணைந்து பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தின் மூலம் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போதை பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மூலம் வரும் 11ம் தேதி போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்குமாறு அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர், அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு கீழ் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட உள்ளது.
அனைத்து மருத்துவக்கல்வி நிறுவனங்களும் வரும் 11ம் தேதி மாபெரும் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதி மொழி எடுக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல, மனநல பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதை பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்காக உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ற, புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிகழ்ச்சி நடைபெற்ற அறிக்கையை புகைப்படத்துடன் வரும் 12ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
