தினமும் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதால் ஆட்டோ டிரைவரை அடித்து கொலை செய்தேன்: கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

 

 

கே.வி.குப்பம், ஜூலை 31: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த நாகல் ஊராட்சி சின்ன நாகல் பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் குப்பன்(50). ஆட்டோ டிரைவர். இவருக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது அருந்துவதற்காக சென்றவர் வீட்டின் அருகில் முகத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் கூலித்தொழிலாளி ராகவேந்திரா(26) என்பவர் குப்பனை கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில், அதே கிராமத்தின் அருகே உள்ள தேன்கனிமூலை என்னும் மலை பகுதியில் தலைமறைவாகியிருந்த ராகவேந்திராவை நேற்று மாலை கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அப்போது, ராகவேந்திரா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

நான் கம்பி கட்டும் கூலி வேலை செய்து வருகிறேன். அருகில் உள்ள அப்பாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்த திருப்பதி மகள் தாமரைச்செல்வி(24) என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஜெய்விக்னேஷ் என்ற எட்டு மாத ஆண் குழந்தை உள்ளது. நானும் இறந்த குப்பனும் ஒரே தெருவை சேர்ந்தவர்கள். சம்பவத்தன்று வழக்கம் போல் குப்பம் குடித்து விட்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். என் குழந்தை கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் தூங்காமல் அழுது கொண்டே இருக்கிறது. சத்தம் போடாதே என பலமுறை அவரிடம் கூறினேன். ஆனால் எனது வீட்டின் அருகே வாசலில் நின்று ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்து வீட்டிலிருந்து எடுத்து வந்த கட்டையால் குப்பன் தலை மீது தாக்கினேன். இதைபார்த்து குப்பனின் குடும்பத்தினர் அலறி அடித்துக் கொண்டு ஊரில் உள்ள அனைவரையும் அழைத்தனர்.

நான் அடித்ததில் குப்பன் ரத்த காயத்தில் கீழே விழுந்து விட்டார். மீண்டும் அவரை கட்டையால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டேன். தப்பிய நான் தேன்கனி மூலை என்னும் மலையில் உள்ள ஒரு புதரில் குப்பனை தாக்கிய கட்டையை மறைத்து வைத்துவிட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து குப்பனை கொலை செய்ததாக தெரிவித்தேன். இரவு முழுவதும் அந்த மலையிலேயே படுத்திருந்தேன், பின்பு போலீசிடம் பிடிபட்டேன். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து நேற்று இரவு ராகவேந்திராவை கே.வி.குப்பம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: