தவெகவிற்கு செல்லும் முடிவில் நாங்கள் இல்லை: இபிஎஸ்சை மாற்றும்வரை ஓயமாட்டோம்

 

விழுப்புரம், ஜூலை 28: அதிமுகவின் தலைமை பொறுப்பிலிருந்து இபிஸ்சை மாற்றும்வரை ஓயமாட்டோம் என சி.வி சண்முகத்தின் ஆதரவாளர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் சி.வி சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கும், இபிஎஸ் நியமித்த புதிய மாவட்ட செயலாளர் பசுபதி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. காவல்நிலையம் வரை பஞ்சாயத்து சென்று வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலநாட்களுக்கு முன்புச சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சென்னையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று தங்களது ராஜினாமா கடிதங்களை வைத்துவிட்டு வந்தனர். தொடர்ந்து இபிஎஸ்சுக்கும், புதிய மாவட்ட செயலாளர் மீது விமர்சனங்களை கூறிவருகின்றனர். அதன்படி சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் சுரேஷ்பாபு, ராதா செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:விழுப்புரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட விஜயாசுரேஷ்பாபு சொந்த கட்சியினராலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளார். தோல்வி குறித்து மாவட்ட வாரியாக ஆய்வுக்கூட்டம் நடத்திவரும் இபிஎஸ், கட்சியில் போட்டியிட்டு ேதால்வியடைந்தவர்களை அழைக்கவில்லை. விழுப்புரம், திண்டிவனம், வானூர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களை அழைக்காமல் தோல்விகுறித்து கூட்டம் நடத்தி என்ன பயன் ஏற்படும். விழுப்புரத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பசுபதி, 2011, 2016ல் விழுப்புரத்தில் சி.வி சண்முகம் போட்டியிட்டபோது தேர்தல் வேலை செய்யவில்லை. இந்நிலையில் கட்சியை விட்டு நீக்கிய ஒரேமாதத்தில் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சிவிதிகளுக்கு புறம்பானது. பொதுச்செயலாளராக இருக்க இபிஎஸ்சுக்கு தகுதியில்லை. அதனால்தான் மாவட்ட செயலாளர்களையும் தகுதியில்லாதவர்களை நியமித்து வருகிறார். கட்சி தலைமையை மாற்ற வேண்டும். அந்த பதவிக்கு சசிகலா உள்ளிட்ட யார் வந்தாலும் நாங்கள் ஏற்க தயாராக இருக்கிறோம்.

மற்ற கட்சிகளுக்கு செல்லவில்லை. சி.வி. சண்முகமும் தவெக உள்ளிட்ட வேறு எந்த கட்சிக்கும் செல்ல தயாராக இல்லை. அதிமுகவில் இருந்துகொண்டு கட்சி பணியாற்றுவோம். பொதுச்செயலாளர் பதவிக்கு சி.வி சண்முகம் ஆசைப்படவில்லை. ஒற்றை தலைமைக்கு முதலில் குரல்கொடுத்து போராடியவர் அவர்தான். இபிஎஸ் தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்விதான். விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி கட்சிவிதிகளை மீறி நியமனம் செய்தது தொடர்பாக தேர்தல்ஆணையத்தில் வழக்கு தொடரஉள்ளோம். தொடர்ந்து எங்களை பற்றியும், சி.வி.சண்முகத்தை பற்றியும் பேசி வந்தால் தக்க பதிலடி கொடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Related Stories: