உயிரிழந்து 3 நாட்கள் ஆகியும் பிரேத பரிசோதனை செய்யவில்லை; குளிர்சாதன பெட்டி பழுதடைந்திருந்ததால் துர்நாற்றத்துடன் அழுகிய நிலையில் சடலம்: ஆரணி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

 

ஆரணி, ஆக. 4: குளிர்சாதன பெட்டி பழுதடைந்திருந்ததால் துர்நாற்றத்துடன் அழுகிய நிலையில் சடலம் 3நாட்களாக பிரேத பரிசோதனை செய்யாமல் இருந்ததை பார்த்த உறவினர்கள் ஆரணி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ேசவூர் பிஆர் நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மகன் சந்தோஷ்(17). செய்யாறில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். விடுமுறை நாட்களில் தனது நண்பரான ஆரணி அடுத்த அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவருடன், ஆட்டோவில் ஊர் ஊராக சென்று ஐஸ் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி இரவு ஆரணி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. அப்போது வியாபாரம் முடித்துவிட்டு விஜய் வீட்டிற்கு வந்த சந்தோஷ், ஐஸ் விற்பனை ஆட்டோவில் உள்ள குளிர்சாதன பெட்டிக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது சந்தோஷ் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சந்தோஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடம் சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சந்தோஷ் குடும்பத்தினர் நேற்று மருத்துவமனைக்கு அவரது உடலை வாங்க வந்தனர். அங்கு பிணவறையில் சந்தோஷ் சடலம் பிரேத பரிசோதனை செய்யாமலேயே வைத்திருந்தனர். மேலும் அவரை வைத்திருந்த குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்திருந்தால், சந்தோஷின் உடல் அழுகிய நிலையில் தூர்நாற்றம் வீசும் நிலையில் இருந்தாக கூறப்படுகிறது.

இதனால் அங்கிருந்த மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய மறுத்து, சடலத்தை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்கள் இறந்து 3 நாட்கள் ஆகியும், பிரேத பரிசோதனை செய்யாமல் சடலத்தை அழுகும் நிலையில் வைத்திருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிர்வாகத்தை கண்டித்து மருத்துமனையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த டவுன் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் தாலுகா இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் சம்பவ இடத்திற்கு வந்து, அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் மதிமணவாளனிடம் பேசி திருவண்ணாமலைக்கு சடலத்தை அனுப்பாமல், ஆரணி அரசு மருத்துவமனையிலேயே சடலத்தை பிரேத பரிசோதனை செய்து தருவதாக தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவர்களிடம் பேசிய பின்னர் ஒரு மணிநேரத்தில் சந்தோஷின் சடலத்தை பிரேத பரிசோதனைசெய்து உறவினர்களிடம் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு 2 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Stories: