புதுச்சேரி, ஆக. 4: புதுச்சேரி அருகே தமிழக அரசு பேருந்து மோதி நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாததால் நீதிமன்ற ஊழியர்கள் பேருந்தை ஜப்தி செய்தனர். புதுச்சேரி திருபுவனையை சேர்ந்த ஸ்டாலின்(35) என்பவர் கடந்த 2014ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் திருபுவனை அருகே சென்றபோது தமிழ்நாடு போக்குவரத்து கழக பேருந்து மோதி படுகாயமடைந்தார். இவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஸ்டாலின் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி கமலி, புதுச்சேரி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், உயிரிழந்த ஸ்டாலின் குடும்பத்துக்கு ரூ.41 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு விட்டார். இதையடுத்து இழப்பீடு தொகை வழங்காததால், கடந்த 2025ம் ஆண்டு கமலி நிறைவேற்றும் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதி ஆனந்தன் தமிழக போக்குவரத்து கழகத்தின் 8 பேருந்துகளை ஜப்தி செய்யுமாறு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.
இதேபோல், வில்லியனூரை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு தமிழக போக்குவரத்து கழக பேருந்து மோதி உயிரிழந்தார். இதுகுறித்த அவரது மனைவி கலைசெல்வி புதுச்சேரி 2வது மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி விசாரித்து, உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.21 லட்சம் இழப்பீடு தொகை வழங்குமாறு கடந்த 2019ம் ஆண்டு உத்தரவிட்டார். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், இழப்பீடு தொகை வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து கலைசெல்வி கடந்த 2021ம் ஆண்டு நிறைவேற்றும் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ெஜயந்தி தமிழக போக்குவரத்து கழக அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்து மற்றும் 5 பேருந்துகளையும் ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தார்.இவ்விரு வழக்குகளின் உத்தரவின் பேரில், மறைமலை அடிகள் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலைய தமிழ்நாடு போக்குவரத்து கழக அலுலவகத்தில் உள்ள 13 பேருந்துகள் மற்றும் அசையும், அசையா சொத்துகளை ஜப்தி செய்வதற்காக புதுவை நீதிமன்ற ஊழியர்கள் ஜெயாஅம்பி, மாணிக்கம் மற்றும் ஊழியர்கள் நேற்று காலை வந்தனர்.
அவர்களுடன் வழக்கு தொடர்ந்த இரு தரப்பை சேர்ந்தவர்களும் உடனிருந்தனர். இதையடுத்து, ஸ்டாலின் என்பவர் வழக்கில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தமிழக பேருந்து ஒன்று ஜப்தி செய்யப்பட்டது. தொடர்ந்து, தமிழக போக்குவரத்து கழக பேருந்து அதிகாரிகள் மற்றொரு வழக்குக்கு பாதி தொகையை காசோலையாக தருவதாக கூறினர். ஆனால், நீதிமன்ற ஊழியர்கள் அதை மறுத்துவிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதாக தெரிவித்துவிட்டு சென்றுவிட்டனர். தொடர்ந்து, இவ்வழக்கு விசாரணை நாளை (5ம் தேதி) நீதிமன்றத்துக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
