பொய்த்து போன பருவமழை; மாவட்டத்தில் நெல் சாகுபடி: பரப்பு வெகுவாக சரிந்தது30 ஏக்கரில் மட்டுமே நாற்று நடவு

 

தர்மபுரி, ஆக.4: எல்நினோவால் பருவமழை பொய்த்து போனதால், தர்மபுரி மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு வெகுவாக சரிந்துள்ளது. 2900 ஏக்கருக்கு சாகுபடி செய்ய வேண்டிய நிலையில், தற்போது வரை 30 ஏக்கரில் மட்டுமே, விவசாயிகள் நெல் நாற்று நட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தர்மபுரி மாவட்டத்தில் வாணியாறு, சின்னாறு, தொப்பையாறு, வரட்டாறு, நாகாவதி அணை, தும்பலஅள்ளி அணை, கேசர்குழி அணை, ஈச்சம்பாடி அணைக்கட்டு ஆகிய 8 அணைகள் உள்ளன. இந்த அணைகளின் பாசன நீரை நம்பி, தர்மபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, மாரண்டஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில், ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு 47 ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. நடப்பாண்டு 50 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், குறைந்த அளவே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மூன்று பருவமாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை முதல் போக நெல் சாகுபடியும், ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை 2ம் போக நெல் சாகுபடியும், நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை 3ம் போக நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை முதல் நெல் சாகுபடி பருவத்தில், நடப்பாண்டு 2,900 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 30 ஏக்கரில் மட்டுமே நெல் நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது. எல்நினோவால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு, மழை பொய்த்து போனதால், நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டன. அணைகளில் நீர்மட்டம் குறைந்து குட்டையாக காட்சியளிக்கின்றன. வழக்கமாக நெல் சாகுபடி செய்யப்படும் இடங்களில் கூட, தற்போது நெல் சாகுபடி செய்யப்படவில்லை.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 941 மில்லி மீட்டர். நடப்பாண்டு இதுவரை 340.2 மில்லி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 214.21 மில்லி மீட்டர் மழை தான் பெய்துள்ளது. இதனால் அணை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. நெல் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்துள்ளது. மாவட்டத்தில் 2026-2027ம் ஆண்டிற்கு 1,97,435 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறுவகைகள் உள்ளிட்ட உணவுதானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் கடந்த ஜூன் 17ம் தேதி வரை 2,090 ஹெக்டேர் பரப்பளவு மட்டும், பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டிற்கு நெல் வகைகளான ஆடுதுறை-39, 57, 54, சிஓ -55, வெள்ளைப் பொன்னி, விஜிடி -1, பிபிடி5204, ஆர்என்ஆர் -15048, ஆகியவற்றில் 154 டன் நெல் விதை இருப்பு உள்ளது.

ஆனால், பருவமழை பொய்த்து போனதால், நெல் சாகுபடி செய்ய பெரும்பாலான விவசாயிகள் முன்வரவில்லை. கடந்த ஆண்டு இதே பருவத்தில், 6,533 ஏக்கரில் நெல் காப்பீடு செய்யப்பட்டது. நடப்பாண்டு மழை இல்லாமல் நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதால், தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில், முதல் போகத்தில் 2,900 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 30 ஏக்கரில் தான் நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. பருவமழை பொய்த்து போனதாலும், எல்நினோவால் பருவநிலை மாற்றத்தாலும், தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய முன்வரவில்லை,’ என்றனர்.

Related Stories: