உளுந்தூர்பேட்டை: அரசு பேருந்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையே மோதல் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் கிராமத்தில் இருந்து பாண்டூர், அரளி, செம்மணங்கூர் வழியாக உளுந்தூர்பேட்டைக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இன்று காலை அந்த பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் ஊழியர்கள், பொதுமக்கள் பயணம் செய்தனர். காலை 8.30 மணியளவில் செம்மணங்கூர் கிராமத்தை கடந்து சென்றபோது பேருந்தில் சென்ற மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. பேருந்தில் சென்ற மாணவிகள் சிலரை மாணவர்கள் ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது.
இதையடுத்து உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்துக்கு பேருந்தை டிரைவர் ஓட்டிச் சென்று நிறுத்தினார். அதற்குள் தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி தப்பிஓடிவிட்டனர். பின்னர் போலீசாரிடம் மற்ற மாணவர்கள், மாணவிகள் சம்பவம் குறித்து முறையிட்டனர். ‘’தினந்தோறும் இதுபோன்று ரகளை நடைபெறுவதால், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும்’’ மாணவிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ‘’உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று போலீசார் கூறியதையடுத்து அனைவரும் பேருந்தில் ஏறி உளுந்தூர்பேட்டை சென்றனர்.
