- கர்நாடகா அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காவிரி ஆணையம்
- சென்னை
- உச்ச நீதிமன்றம்
- காவிரி நீர் மேலாண்மை ஆணையம்
- தில்லி
- எஸ். கே. ஹால்டர்
சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் கூடி நீர் பங்கிட்டை உறுதி செய்கிறது. அதன்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 53வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் தமிழக நீர்வள துறையின் முதன்மை செயலாளர் சத்யபிரதா சாகு, காவிரி தொழில்நுட்பப் பிரிவு மற்றும் மாநிலங்களுக்கிடையிலான நீர்வள பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் மத்திய தொழில்நுட்ப பிரிவு மற்றும் மாநிலங்களுக்கிடையிலான நீர்வள பிரிவு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், அதிகாரிகள் வைத்த கோரிக்கையில், ‘உச்ச நீதிமன்றத்தின் 16.2.2018 தேதியிட்ட இறுதி தீர்ப்பின்படி, பில்லிகுண்டுலு நீர்த்தேக்கத்திற்கு ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 19 வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்ட நீர்வரத்து, நிர்ணயிக்கப்பட்ட அளவான 28.337 டிஎம்சி ஆகும். ஆனால் அதற்கு மாறாக 3.442 டிஎம்சி மட்டுமே கிடைத்துள்ளது. இது வெறும் 12.15 சதவீதம் மட்டுமே. இதன் விளைவாக 24.896 டிஎம்சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதில் ஜூலை 20ம் தேதி நிலவரப்படி மேட்டூர் நீர்த்தேக்கத்தின் நீர் இருப்பு 36.979 டிஎம்சி ஆக மட்டுமே உள்ளது.
எனவே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்சிய நீரை உடனடியாக திறந்து விட வேண்டும்,’ என்றனர். இதையடுத்து கர்நாடகா அரசு தரப்பில் கலந்து கொண்ட அதிகாரிகள், ‘எங்களது மாநிலத்தில் இருக்கும் நீர் தேக்கங்களில் தண்ணீர் கிடையாது. பெங்களூரு நகரின் குடிநீருக்கே பற்றாக்குறையாக உள்ளது. அதனால் தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே ஹல்தர், ‘இந்த நிலையை ஒரு வாரத்திற்கு கண்காணித்து, பின்னர் மாநிலங்களால் எழுப்பப்பட்ட அனைத்து கருத்துக்களையும் மற்றும் நீர்-வானிலை நிலவரத்தையும் கருத்தில் கொண்டு, வரும் 28ம் தேதி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்து கொள்ளலாம்,’ என்று தெரிவித்தார். தமிழக அதிகாரிகள் கோரிக்கை வைத்தும், தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு ஆணையம் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
