×

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த கூடாது எனக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சோதனை, விசாரணை என்ற பெயரில் தங்களை துன்புறுத்தக் கூடாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களில், ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தங்களுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் நிபந்தனையை கண்டிப்புடன் பின்பற்ற தயாராக உள்ளோம். தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கணக்கு தீர்க்க வேண்டியுள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளார். அதன்படி, ஏதேனும் ஒரு வழக்கில் தங்களை கைது செய்ய காவல் துறையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. குதிரை பேர வழக்கில் தங்களை காவலில் வைத்து விசாரிக்க அவசியமில்லை என்று உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கிய பின்னும், தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படுகின்றன.

எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதால் சோதனை, விசாரணை என்ற பெயரில் தங்களை துன்புறுத்தக் கூடாது என்று காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.இந்த மனுக்கள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுவில் பொத்தாம் பொதுவான உத்தரவை கோருவதாலும், பல குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளதாலும், மனுவுக்கு விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் கோரினார்.

அப்போது, செந்தில்பாலாஜி, அசோக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன் பெற்ற தங்களை வேறு வழக்குகளில் கைது செய்யக் கூடும் என்ற அச்சம் உள்ளது. வழக்குகளின் விசாரணையில் தலையிடவில்லை. மாறாக விசாரணைக்கு அழைத்து சட்டப்படி நோட்டீஸ் அனுப்பவேண்டும் என்று மட்டுமே கோருகிறோம். விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சரணடைந்து முன் ஜாமீன் பெறவில்லை. இந்த சூழ்நிலையில், தங்களை துன்புறுத்தக் கூடாது என்று கோர முடியாது. மற்ற வழக்குகளை பொருத்தவரை, முன்கூட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுதாரர் கோரியபடி எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Senthil Balaji ,Madras High Court ,Chennai ,minister ,Ashok Kumar ,
× RELATED வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்குகளை...