×

தவெகவில் இணைந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக சார்பில் சபாநாயகரிடம் வலியுறுத்தல்

சென்னை: தவெகவில் இணைந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதிமுக சார்பில் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சார்பில் பேரவை தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனு மீது சபாநாயகர் கோரிய விளக்கங்களுக்கு பதிலளிக்கும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் அளித்த விளக்க கடிதத்தை அக்கட்சியின் சட்டமன்ற கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் ஆகியோர் தலைமை செயலகத்தில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து வழங்கினர்.

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 6 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக மற்றும் தாங்கள் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர். குதிரை பேரத்தின் மூலமாக தவெகவில் இணைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தடை தாவல் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏற்கனவே சபாநாயகரிடம், அதிமுக பொதுச் செலயாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது.

அந்த புகார் மனு மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். அதன் அடிப்படையில் புகார் மனு மீது சில விளக்கங்களை கேட்டு சபாநாயகர் தகவல் கோரியிருந்தார். எடப்பாடி பழனிசாமி கொடுத்திருந்த விளக்கத்தை கடிதம் மூலமாக சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதியளித்துள்ளார்.

கட்சியின் தலைவரே சட்டப்பேரவைக்கான கட்சி தலைவர், செயலாளர் மற்றும் கொறடாவை நியமிக்க முழு அதிகாரம் படைத்தவர். அந்த சட்ட விதிகளுக்கு உட்பட்டே அதிமுகவின் நியமனங்கள் நடைபெற்றுள்ளன. விரைவில் தொடங்கவுள்ள நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் புதிய திட்டங்களை ஆய்வு செய்த பின்னரே அதிமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்து பேசப்படும்.

எதற்காக சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்தார்கள் என விளக்கம் கடிதம் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தால் எதற்காக கடிதம் கொடுக்கப்பட வேண்டும்?. அதிமுகவில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள். அவர்களுக்கு அமைச்சர்கள் பதவிகள் கிடைக்கும் என எண்ணத்தில்தான் தவெகவிற்கு சென்றனர். ஆனால் அதுவும் தோல்வியடைந்துவிட்டது.

கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மற்றும் கட்சிக்கு எதிராக ராஜினாமா செய்தவர்கள் என அனைவருக்கும் எதிராக சட்டப்படி நடவடிக்கை கோரப்பட்டுள்ளது. கட்சியிலிருந்து சிலர் விலகுவதும், மீண்டும் இணைவதும் அரசியலில் இயல்பான ஒன்றுதான். இது ஒரு பங்காளிச் சண்டையை போன்றது. நிரந்தர பிரிவு அல்ல. அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தொடர்ந்து வலிமையோடு இயங்கும். இவ்வாறு கூறினர்.

Tags : TDP ,AIADMK ,Chennai ,General ,Edappadi Palaniswami… ,
× RELATED வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்குகளை...