×

அதிமுகவில் இருந்து கட்சி தாவிய முன்னாள் அமைச்சர்களுக்கு பதவி வழங்க தவெகவில் கடும் எதிர்ப்பு: தனி கோஷ்டியாக செயல்படுவதால் பரபரப்பு

சென்னை: அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் பதவி மற்றும் கட்சி பதவி வழங்க, கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கட்சி தாவியவர்கள் மட்டும் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கடும் வீழ்ச்சியை சந்தித்ததை தொடர்ந்து, கட்சிக்குள் மோதல் எழுந்தது. இந்த மோதலைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் புதுக்கோட்டை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா மற்றும் தாராபுரம் சத்தியபாமா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார் ஆகிய 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

அவர்கள் தேர்தலில் போட்டியிட காத்திருந்த நிலையில், தமிழகத்தில் இடைத் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதோடு தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையமும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு குதிரைபேரம் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எம்எல்ஏ பதவிதான் தற்போது இல்லை. கட்சியிலாவது பதவி கிடைக்கும் என்று தவெகவின் மூத்த தலைவர்களை நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளனர்.

அதேபோல முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், திருச்சி வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் பல முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் சேர்ந்தனர். அவர்களும் தங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவியை கேட்டு தவெக மூத்த தலைவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தவெக 108 தொகுதிகளில் வென்றது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் புதியவர்களுக்கு அதாவது ரசிகர் மன்றத்தில் இல்லாதவர்களுக்கு சீட் வழங்கப்பட்டது. ஆனால் விஜய் என்ற முகத்துக்காகத்தான் ஓட்டுக்கள் விழுந்தது.

பல எம்எல்ஏக்கள் பிரசாரத்துக்கே செல்லவில்லை. இதனால் அதிமுகவினர் வந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை தற்போது தவெகவில் இல்லை. அவர்கள் தங்களை வளப்படுத்திக் கொள்ளவும், மீண்டும் கொள்ளையடிக்கவுமே வருகின்றனர். இதனால் அவர்களுக்கு கட்சிப் பதவி வழங்கக் கூடாது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர் மன்றத்தில் போஸ்டர் ஓட்டியவர்கள், கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தவர்களுக்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும். பதவி ஆசையில் வந்தவர்களுக்கு வழங்கக் கூடாது என்று தவெகவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தற்போதைய அமைச்சரவையில் 13 பேர்தான் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற அமைச்சர்கள் அனைவருமே கட்சிக்கு புதிதாக வந்தவர்கள். இதனால் கட்சியை வெளியில் இருந்து வந்தவர்கள் கபளீகரம் செய்வார்கள். நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தவெக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் முன்னாள் அமைச்சர்கள், பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் என யாருக்கும் கட்சியில் பதவி வழங்க கட்சித் தலைமை விரும்பவில்லை.

இது தெரிந்ததும், முன்னாள் அமைச்சர்கள் பலரும், அதிமுகவினருக்கு போன் செய்து, யாரும் தவெகவுக்கு வரவேண்டாம். நாங்கள் தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டோம். சின்ன பசங்களிடம் அசிங்கப்படுகிறோம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம். நீங்களும் வந்து அவதிப்பட வேண்டாம் என்று பேசி வருகின்றனர். இதனால் அதிமுகவில் இருந்து வெளியேற நினைக்கிறவர்கள் தற்போது அக்கட்சியில் தொடர முடிவு செய்துள்ளதோடு, கட்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தற்போது ஒரு புயல் வீசத் தொடங்கியுள்ளதால், அவர்களுடன் இணைந்து கட்சியை மீட்கும் முயற்சியை தொடங்கியுள்ளனர்.

இதனால்தான் கடந்த சில நாட்களாக எந்த அதிமுக எம்எல்ஏக்களும் தவெகவுக்கு வர மறுத்து வருவது, அமைச்சர்களுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. தற்போது 7 எம்எல்ஏ பதவிகள் காலியாக உள்ளன. மொத்தம் 227 எம்எல்ஏக்களே உள்ளனர். மெஜாரிட்டிக்கு 114 எம்எல்ஏக்களே தேவை. தவெகவிடம் 107, அமமுகவில் இருந்து வந்தவருடன் சேர்த்து 108 ஆகியுள்ளது. மீதம் 6 எம்எல்ஏக்கள் மட்டுமே தேவை. மேலும், இரு கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் என கூட்டணியில் 8 எம்எல்ஏக்கள் உள்ளதால், மெஜாரிட்டிக்கும் அதிகமான எம்எல்ஏக்கள் உள்ளதால், தவெகவினரும், அதிமுகவில் இருந்து யாரையும் இழுக்கும் வேலையை தற்போது நிறுத்தி வைத்துள்ளனர்.

ஒன்றிய அரசும், குதிரை பேரம் குறித்து விசாரணையை ரகசியமாக தொடங்கியுள்ளதாம். இந்த நேரத்தில் எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து மாட்டிக் கொள்ளக்கூடாது என்று தவெக தலைவர்கள் நினைக்கிறார்களாம். கொஞ்ச காலம் அமைதியாக இருக்கலாம் என்று நினைக்கிறார்களாம். இதனால்தான் கடந்த சில நாட்களாக எம்எல்ஏக்களை தூக்கும் படலம் நடைபெறவில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Tags : AIADMK ,Chennai ,Tamil Nadu Assembly ,
× RELATED வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்குகளை...