பேருந்தில் கல்லூரி மாணவன் தவறி விழுந்து படுகாயம்: கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பயணிகள் போராட்டம்

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் காஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்த் (17). திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வருகிறார். இவர், வழக்கம்போல் இன்று காலை கல்லூரிக்கு செல்ல திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஏறினார். பேருந்தில் பயணிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பயணம் செய்ததால் கூட்ட நெரிசலில் புட் போர்டில் நின்றபடி கல்லூரி மாணவன் வசந்த் பயணம் செய்துள்ளார்.

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை கூளூர் அருகே பேருந்து வந்தபோது, நிலைதடுமாறி கல்லூரி மாணவன் வசந்த் கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக பேருந்து ஓரம்கட்டப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கூடுதல் பேருந்து இயக்க கோரி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவஇடத்துக்குவந்த கனகம்மாசத்திரம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திருவள்ளூர்-திருத்தணி இடையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்ட நெரிசல் நிறைந்த பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. திருவள்ளூர்-திருத்தணி இடையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கவேண்டும் என்றனர். கூடுதல் பேருந்துகள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக ேபாலீசார் உறுதியளித்தனர். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கனகம்மாசத்திரம் பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

Related Stories: