விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தூத்துக்குடி: முதலமைச்சர் விஜய்யை மிரட்டும் வகையில் பேசிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக எம்எல்ஏவின் ஜாமின் மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ மார்க்கண்டேயன், சட்டசபையில் முதல்வர் விஜய் எலும்பை உடைத்து விடுவோம் என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தவெக நிர்வாகிகள் தரப்பில் போலீஸ் ஸ்டேஷனிலும், மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன. மார்க்கண்டேயன் எம்எல்ஏ மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நேற்று மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மார்க்கண்டேயன் மனு தாக்கல் செய்தார்.அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசாரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து மார்க்கண்டேயனை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த இரண்டு மனுக்களையும் நீதிபதி சுமதி விசாரித்தார். மார்க்கண்டேயன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகேட்ட போலீசாரின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories: