ஆலைக்கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு பொதுமக்கள் போராட்டத்தால் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆய்வு

*மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வெளியேறியதால் அதிர்ச்சி

பவானி : அம்மாபேட்டை அருகே பூனாச்சியில் செயல்படும் மரவள்ளி கிழங்கு மாவு உற்பத்தி மற்றும் எத்தனால் ஆலைகள் வெளியேற்றும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள பூனாச்சியில் தனியாருக்கு சொந்தமான மரவள்ளிக்கிழங்கு, ஸ்டார்ச் தயாரிக்கும் கம்பெனி மற்றும் எத்தனால் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த இரு ஆலைகளில் இருந்தும் வெளியேறும் கழிவு நீர் மற்றும் புகையினால் சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டதோடு காற்றும் மாசுபட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் பொது மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும், இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்தது.

இந்த நிலையில், கடந்த 18ம் தேதி அப்பகுதிக்கு நலத்திட்ட விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் செங்கோட்டையனின் காரை ராமச்சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் வழிமறித்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, செங்கோட்டையன் இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் ராமச்சந்திரபுரத்திற்கு வந்து, அந்த கிராம மக்களிடம் பாதிப்புகளை குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து அப்பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரை பார்வையிட்டார்,அப்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பொதுமக்களின் குடிக்கும் தண்ணீர் மற்றும் பயன்படுத்தும் ஆழ்துளை கிணறுகளின் தண்ணீர் மாதிரிகளை சேகரித்தனர். விவசாய நிலங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டபோது, தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வெளிவந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த, அமைச்சர் அதிகாரிகளை அதனை பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

அந்தத் தண்ணீரை பரிசோதித்த போது 2,000 டிடிஎஸ் அளவு இருப்பது தெரிய வந்தது, தொடர்ந்து, அவற்றின் மாதிரிகளையும் பரிசோதனைக்காக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கேன்களில் சேகரித்தனர்.

தண்ணீரில் டிடிஎஸ் அளவு அதிகமாக இருப்பதாகவும், பரிசோதனை முடிவுகளில் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அதிமுக பிரமுகர்களுக்கு சொந்தமானது என கருதப்படும் இந்த ஆலை நிர்வாகத்திற்கு எதிராக, புகார் தெரிவித்த இரண்டு நாட்களில் நடைபெற்ற இந்த சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: