உளுந்தூர்பேட்டை, ஜூலை 18: உளுந்தூர்பேட்டை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பு.மலையனூர் கிராமம். இந்த கிராம ஊராட்சி நெடுஞ்சாலை ஓரம் ஆக்கிரமிப்பு செய்து 25 குடும்பத்தினர் வீடு கட்டி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இதேபோல் கணையார் ஏரி புறம்போக்கு இடத்தில் சுமார் 60 ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடங்களில் குடியிருந்து வரும் 100க்கும் மேற்பட்டவர்களை நீதிமன்ற உத்தரவின்படி ஏரி ஆக்கிரமிப்பு மற்றும் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நேற்று வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், டிஎஸ்பி அசோகன் மற்றும் வருவாய்துறை, காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சென்றபோது அங்கு திரண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 50 ஆண்டு காலமாக குடியிருந்து வரும் இவர்களை திடீரென காலி செய்ய சொன்னால் எங்கே செல்வார்கள்.
இவர்களுக்கு இதே பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வாழ்வாதாரத்திற்கு அரசு உரிய உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை வலியுறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது வீடுகளை இடித்தால் தங்கள் பிள்ளைகளுடன் எங்கே தங்குவது, தங்களுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அரசு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து வீடுகள் இடிப்பதை தற்காலிகமாக கைவிட்டு விவசாய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை மட்டும் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி கையகப்படுத்தினார்கள். இதற்கிடையே நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் மீண்டும் வீடுகளை அதிகாரிகள் இடிப்பதற்காக மின் இணைப்புகளை துண்டிப்பதற்காக வந்தபோது அந்த பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி சுதா (38) என்பவர் வீட்டின் கதவை மூடிக்கொண்டு புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
உடனே போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் கதவை உடைத்து சுதாவை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை முதல் மாலை வரை சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதுடன், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய தயாராக பேருந்தும் கொண்டு வந்து போலீசார் நிறுத்தியதால் மலையனூர் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
