உளுந்தூர்பேட்டை, ஜூலை 18: உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி இயக்கப்பட்ட ஒரு அரசு பேருந்து, பிள்ளையார்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றது. பேருந்தில் ஏற்கனவே அதிகளவில் கூட்டம் இருந்ததால், மாணவர்கள் பலர் உள்ளே ஏற முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் களமருதூர் அரசு பள்ளிக்குச் சென்ற சில மாணவர்கள், பேருந்தின் பின்புற டேஞ்சர் லைட்டில் கால் வைத்து விளம்பர பலகையை பிடித்தபடி தொங்கியவாறு உயிரை பணயம் வைத்து பயணம் செய்தனர்.
இந்த ஆபத்தான பயணத்தை அந்த வழியாக சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும். இதுபோன்ற ஆபத்தான பயணங்களைத் தடுக்க போக்குவரத்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி ஆபத்தான முறையில் சென்ற சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
