விழுப்புரம், ஜூலை 18: விழுப்புரம் மாணவன் நீட் மறுதேர்வில் தமிழகத்தில் முதலிடமும், அகில இந்திய அளவில் 12வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள விஜிபி நகரைச் சேர்ந்த எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவர் அஞ்சன் ராமச்சந்திரன். இவரது மகன் வேங்கடபதி வேலாயுதம் (17). இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து முடித்தார். அதில் 600க்கு 483 மதிப்பெண் பெற்றார். இவர் தந்தையை போல் மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தில் இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வை எழுதினார். இதில் பல்வேறு முறைகேடு காரணமாக தேர்வு நிறுத்தப்பட்டு மறு நுழைவுத்தேர்வு கடந்த ஜூன் 21ம்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 705 மதிப்பெண்களை மாணவன் வேங்கடபதி வேலாயுதம் பெற்றுள்ளார். அதன்படி கட்ஆப் அடிப்படையில் 99.99 சதவீத மதிப்பெண்களையும் பெற்று தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவனை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
