புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி அமைச்சர்கள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள்(20ம் தேதி) தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய பாஜ அரசு திட்டமிட்டுள்ளது. இதேபோல், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது பற்றி விவாதிக்க நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய பாஜ அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த சூழலில், டெல்லியில் நேற்று தேஜ கூட்டணி அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். இதில் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜூ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் லாலன் சிங், ராஷ்ட்ரிய லோக் தளத்தின் ஜெயந்த் சவுத்ரி, தெலுங்கு தேசம் கட்சியின் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், நடைபெறவுள்ள மழைக்கால கூட்டத்தொடருக்கான அரசின் அலுவல்கள், கூட்டத்தொடரின்போது 2 அவசர சட்டங்களை நாடாளுமன்ற சட்டங்களாக மாற்றுவதற்கு ஒன்றிய அரசு அளிக்கும் முன்னுரிமைகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் ஆளும் கூட்டணியின் வியூகங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
