அயோத்தி: அயோத்தியில் சடங்குகள் ஒன்றும் புதிதல்ல. ஆனால் ராமர் கோயில் அறக்கட்டளையானது தற்போது நடத்தி வரும் 10 நாள் சுத்திகரிப்பு சடங்கு தனித்துவமானதாக கருதப்படுகின்றது. ஏனெனில் இது சமீபத்தில் அறக்கட்டளையில் நடந்த நன்கொடை திருட்டு சம்பவத்துக்கு பிராயச்சித்தம் தேடுவதையும், கடவுளிடம் மன்னிப்பு கோருவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரியின் முயற்சியினால் புனிதப்படுத்தல் சடங்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த தூய்மைப்படுத்தல் சடங்கானது புதனன்று தொடங்கியது.
இது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் அயோத்தியை சேர்ந்த குருகுல மாணவர்கள் விஷ்ணு சகஸ்நாம ஸ்தோத்திரத்தை ஓதுகின்றனர். நாள்தோறும் 251 முறை விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் ஓதப்படுவதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும். குழந்தை ராமர் இருப்பிடத்தில் இழைக்கப்பட்ட தவறுகளை சரிசெய்வதற்காகவே விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தேர்திர பாராயணம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துடன் வால்மீகி ராமாயண பாராயணமும் நடைபெற்று வருகின்றது
