ஒரே ஆணையத்திடம் குவியும் அதிகாரங்கள் உயர்கல்வி நிறுவனங்களின் சுயாட்சிக்கு புதிய நெருக்கடி: ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு எச்சரிக்கை

 

புதுடெல்லி: தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் புதிய மசோதா உயர்கல்வி நிறுவனங்களின் சுதந்திரத்தை பறிக்கும் என நாடாளுமன்ற கூட்டுக்குழு எச்சரித்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழு (என்சிடிஇ) ஆகியவற்றை கலைத்துவிட்டு, ஒற்றை ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்குவதற்காக ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான்’ (விபிஎஸ்ஏ) மசோதா, 2025ம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தேசிய கல்விக் கொள்கை 2020ம் திட்டத்தை அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கொண்டுவரப்பட்ட இந்த மசோதா, விரிவான பரிசீலனைக்காக நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அனைத்து அதிகாரங்களும் ஒரே ஒரு ஒழுங்குமுறை அமைப்பிடம் மட்டுமே குவிக்கப்படும் என்றும், இதனால் உயர்கல்வி நிறுவனங்களின் சுயாட்சித் தன்மை மற்றும் கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்படும் என்றும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டுக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வரைவு அறிக்கையில், ‘ஒரே மைய அமைப்பிடம் அனைத்து அதிகாரங்களும் குவிவது, அதிகாரத்துவ அல்லது கருத்தியல் ரீதியான ஆதிக்கத்திற்கு வழிவகுத்து, தற்போதுள்ள யுஜிசி கட்டமைப்பின் கீழ் கல்வி நிறுவனங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை சீர்குலைக்கும்’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள தரப்படுத்தப்பட்ட அபராதக் கட்டமைப்பை தன்னிச்சையாக விதிக்கக் கூடாது என்றும், விதிமீறல்களில் ஈடுபடும் போலி நிறுவனங்களின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து தனிப்பட்ட முறையில் பொறுப்பாளியாக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கல்வி நிறுவனங்களில் ஓய்வுபெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியை 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கி 90 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும், ஆணையத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை தேர்வு குழுவின் பரிந்துரைப்படி குடியரசுத் தலைவர் நியமிக்கலாம் என்றும் அந்த வரைவு அறிக்கை கூறுகிறது.

 

Related Stories: