ராமேஸ்வரத்தில் பதுக்கிய 110 பாட்டில்கள் பறிமுதல்

 

ராமேஸ்வரம், ஜூலை 15: ராமேஸ்வரத்தில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 110 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரம் சேராங்கோட்டை மீனவ கிராம பகுதியில் கடலுக்குச் செல்லும் மீனவர்களை குறி வைத்து கள்ள மது விற்பனை நடைபெறுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து நேற்று தனிப்பிரிவு எஸ்ஐ வடிவேல் தலைமையில் முரளி உள்ளிட்ட போலீசார் ரகசிய ரோந்து மேற்கொண்டனர்.

அதில் அப்பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள்(60) மற்றும் சரஸ்வதி (47) ஆகிய இருவரையும் 70 மதுபாட்டில்களுடன் தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதை தொடந்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில் நந்தகுமார்(26) என்பவரை 40 குவாட்டர் பாட்டில்களுடன் கைது செய்தனர். பின் துறைமுக காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய தனிப்பிரிவு போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர். இதில் கோவிந்தம்மாள், சரஸ்வதி ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே கள்ள மது விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: