அரியலூர், ஜூலை 15: அரியலூர் மாவட்டம் அருங்காலில் முன்விரோத தகராறில் தொழிலாளியை தாக்கிய வழக்கில் ஓட்டல் கடை உரிமையாளருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அரியலூர் அருகேயுள்ள அருங்கால் காலனித் தெருவைச் சேர்ந்த தனபால் (45), முத்தழகன் மகன் கிருஷ்ணமூர்த்தி (36). இருவரும் நண்பர்கள் ஆவர்.
இதில் சென்னையில் கிருஷ்ணமூர்த்தி நடத்தி வரும் ஓட்டலில் வேலை பார்த்து வந்த தனபால், சொல்லாமல் வேலையை விட்டு, ஊருக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 9.7.2020 அன்று அருங்காலுக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி, அங்கு தனபாலை சரமரியாக தாக்கியுள்ளார்.
இதுகுறித்து தனபால் மனைவி பூமாபதி அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட கீழப்பழுவூர் காவல் துறையினர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து, அரியலூர் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்து வந்த நீதிபதி தீபா, கிருஷ்ணமூர்த்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
