இலுப்பூர், ஜூலை 15: அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைபட்டியில் நடைபெற்ற கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாமில் 100 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், கோமாரி நோய் 9வது சுற்று தடுப்பூசி செலுத்தும் பணி தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முக்கண்ணாமலை பட்டியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் 100 மாடுகள், கன்றுகள் மற்றும் எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. இப்பணியை கால்நடை மருத்துவர் தயானந்த், கால்நடை ஆய்வாளர் அழகு நாச்சி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் நவீன் மேற்கொண்டனர். மேலும் கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து பாதுகாக்கவும், நோய் பரவலைத் தடுக்கவும் அனைத்து கால்நடை வளர்ப்போரும் தங்களது கால்நடைகளுக்கு அரசின் கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் செலுத்தி பயன்பெறுமாறு கால்நடைகளை வளர்ப்போரிடம் கேட்டுக் கொண்டனர்.
