கொடைக்கானல், ஊட்டியில் சோதனை அடிப்படையில் தானியங்கி பால் விற்பனை இயந்திரம் அமைப்பு: உயர் நீதிமன்றத்தில் ஆவின் நிறுவனம் தகவல்

சென்னை: ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, பாலை விநியோகிக்க பிளாஸ்டிக் பாக்கெட்களுக்கு பதிலாக மாற்று வழியை கண்டறியுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி, ஆவின் நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில், ஆவின் பால் விநியோகத்துக்கு மீண்டும் தானியங்கி விற்பனை இயந்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.

சோதனை அடிப்படையில் கொடைக்கானல் மற்றும் ஊட்டி நகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் நிறைந்த பகுதிகளில் இந்த இயந்திரங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, உத்தரபிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒரு இயந்திரம் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் இரண்டு இயந்திரங்களை வாங்க உள்ளோம். இயந்திரங்களை நிறுவுவதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது.

இயந்திரங்களை வைத்த பிறகு, அருகில் உள்ள வீடுகள், ஓட்டல்கள் ஆகியவற்றுக்கு பாக்கெட்களில் பால் விநியோகிக்கக் கூடாது என்று மொத்த விற்பனையாளர்கள், ஏஜென்ட்கள், வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட உள்ளது. இயந்திரங்களை அமைத்த பிறகு பாக்கெட்களில் பால் விற்பனை நிறுத்தப்படும். இரண்டு இடங்களிலும் தானியங்கி விற்பனை இயந்திரங்களின் செயல்பாடு, மக்களின் வரவேற்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: