பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாப்பது அரசியலமைப்பின் கடமை: நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு

 

மதுரை: பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய காசிக்கு, ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்த நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பை ஐகோர்ட் கிளை உறுதி செய்து உத்தரவிட்டதுடன், பெண்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாப்பது அரசியலமைப்பின் கடமை என கூறியுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி. இவர் பல பெண்களை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி ஆபாச வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். பின்னர் அவர்களின் வீடியோ மற்றும் போட்டோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி பணம் பறித்து வந்தார். இவரால் பாதிக்கப்பட்ட நாகர்கோவில், சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பலர் அளித்த புகாரில் 2020ம் ஆண்டு காசி கைது செய்யப்பட்டார்.

அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்களில் 120 பெண்களின் 400க்கும் மேற்பட்ட வீடியோ மற்றும் ஆபாச போட்டோக்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, காசி மீது போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டு, நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு கூறப்பட்டது. இயற்கை மரணம் அடையும் வரை காசிக்கு ஆயுள் தண்டனை, ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து, நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை எதிர்த்து காசி, ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர். நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினர். நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பு: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் நபர்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாப்பது, குற்றவாளிகளை தண்டிப்பது அரசியலமைப்பின் கடமையாகும். தற்போதைய சமூக ஊடகங்களில், நன்மைகள் இருந்தாலும், இதன் மூலம் பாலியல்ரீதியாக சுரண்டலும் நடைபெறுகிறது. இளம்பெண்கள் ஒருவரிடம் எவ்வளவு நம்பிக்கையாக பழகினாலும், தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களை, சமூக ஊடகங்கள் மூலம் நண்பர்களிடம் பகிரக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

நம்பிக்கை துரோகம் செய்யப்பட்ட பின் சட்டரீதியான நிவாரணத்தை நாடும் வேதனையான செயல்முறையை எதிர்கொள்வதை விட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்தது. இந்த தீர்ப்பானது, தற்போதுள்ள டிஜிட்டல் உலகில், பெண்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். எனவே இந்த தீர்ப்பானது தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்படுகிறது. அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி இளம்பெண்களை பாலியல்ரீதியாக சுரண்டுவது தொடர்கிறது. இளம்பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

தேவையில்லாமல் சமூக ஊடகங்களில் தனிப்பட்ட புகைப்படங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையில் தலையிட தேவையில்லை. குற்றச்சாட்டு சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து உத்தரவிடுவதுடன், மேலும் மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர். தேவையில்லாமல் சமூக ஊடகங்களில் தனிப்பட்ட
புகைப்படங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும்

Related Stories: