3வது கர்ப்பத்தை கலைக்க மனைவி முடிவு; மகள், மகனை கொன்று தொழிலாளி தற்கொலை: மேட்டூர் அருகே சோகம்

 

மேட்டூர்: 3வது குழந்தையை விரும்பாமல் கருக்கலைக்க மனைவி முடிவு செய்ததால், 2 குழந்தைகளை கொன்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஆண்டிகரை பகுதியை சேர்ந்தவர் வல்லரசு (26). கட்டிடத் தொழிலாளியான இவரது மனைவி பிரியா (23). இவர்களுக்கு மைவிழி (4) என்ற மகளும், தர்ஷன் (2) என்ற மகனும் இருந்தனர். கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் விசாரித்த போலீசார், தம்பதியை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து, 3 மாதங்களுக்கு முன் இருவரும் குஞ்சாண்டியூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

இந்நிலையில், பிரியா 3வதாக கர்ப்பமடைந்தார். அவர் தனக்கு இரண்டு குழந்தைகளே போதும், மூன்றாவது குழந்தை வேண்டாம் என்று கூறி வந்துள்ளார். ஆனால், கருவை கலைக்க கூடாது என கணவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், பிரியா கோபித்துக் கொண்டு மேட்டூர் ராஜகணபதி நகரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்குள்ள தனியார் பால் பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார். அவரை சமாதானப்படுத்த வல்லரசு மற்றும் அவரது தம்பி அஜித், பெரியப்பா மாதேஸ்வரன் ஆகியோர் நேற்று முன்தினம் ராஜகணபதி நகருக்கு சென்றுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவரும் வீடு திரும்பி விட்ட நிலையில், வல்லரசு மட்டும் மாமியார் வீட்டில் இருந்துள்ளார். இரவில் வல்லரசு இரு குழந்தைகளுடன் தனி அறையில் தூங்க சென்றார்.

நேற்று காலை நீண்டநேரமாகியும் கதவை திறக்காததால், பிரியா மற்றும் அவரது தாயார் வெண்ணிலா ஆகியோர் பலமாக தட்டிப் பார்த்தனர். அப்போதும் கதவு திறக்காததால் அக்கம்-பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து பார்த்தபோது, 2 குழந்தைகளும் துப்பட்டாவில் வீட்டின் இரும்பு சட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். வல்லரசு மனைவியின் துப்பட்டாவில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். வல்லரசு தனது குழந்தைகளை தூக்கில் தொங்க விட்டு கொலை செய்து, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: