20 ஆண்டுகளாக களத்தில் உழைத்த எங்களுக்கு முன்னுரிமை இல்லை தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு பணி? தமிழ்நாடு மின் ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

சென்னை: தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு பணி வழங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என தமிழ்நாடு மின் ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானப் பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். இந்நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.

அரசுகள் மாறினாலும், இந்த கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பது தொழிலாளர் அமைப்புகளின் தொடர்ச்சியான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் மகேந்திரன் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வருகிறோம்.

கஜா, வர்தா, ஒக்கி போன்ற புயல்களின்போதும், கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட நாங்கள் களத்தில் இருந்து மின்விநியோகத்தை சீரமைத்தோம். உயிரை பொருட்படுத்தாமல் இரவு, பகலாக உழைத்தோம். இவ்வளவு ஆண்டுகள் பணியாற்றிய எங்களுக்கு முன்னுரிமை வழங்காமல், 2020ம் ஆண்டு நடைபெற்ற கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு தற்போது பணி நியமன ஆணைகள் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்வில் பூஜ்ஜியம், இரண்டு, ஏழு என மிகவும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும், சிலருக்கு பணம் பெற்றுக்கொண்டு பணி வழங்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். மேலும், இந்த நியமன ஆணைகளை உடனடியாக ரத்து செய்து, நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பாலசந்தர் கூறியதாவது:

தேர்தலுக்கு முன்பு ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்று வரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.

எங்களது பிரச்னைகள் குறித்து மின்சாரத் துறை அமைச்சரும், சம்பந்தப்பட்ட அமைச்சரும் உரிய கவனம் செலுத்தவில்லை. இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவ்வாறு கூறினர்.

Related Stories: