புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட கோவில்பட்டியை சேர்ந்த சீனிவாசன் மகன் நரி (எ) தினேஷ்(19). சந்தைப்பேட்டை ஷூ மேக்கர் காலனியை சேர்ந்த ராஜி மகன் மாரிமுத்து (27), சுப்பிரமணி மகன் ராகுல்(29), சந்திரசேகர் மகன் அருண் (எ) முருகானந்தம் (22). நண்பர்களான 4 பேரும் பழைய இரும்புகளை சேகரித்து விற்பனை செய்து வந்தனர். கஞ்சா விற்பனையும் செய்து வந்ததாக கூறப்படும் தினேஷ் மீது திருக்கோகர்ணம், வெள்ளனூர் காவல் நிலையங்களில் காப்பர் வயர் திருடிய வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பழைய இரும்பு சேகரித்து விற்பனை செய்வதில் தினேஷ்குமாருக்கும், மற்ற 3 பேருக்கும் இடையே தொழில் போட்டியால் அவ்வப்போது தகராறு இருந்து வந்தது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தினேஷை கொலை செய்ய 3 பேரும் திட்டமிட்டனர்.
சந்தைப்பேட்டை பகுதியில் பிறந்தநாள் விழா பார்ட்டி இருப்பதாக கூறி நேற்றுமுன்தினம் இரவு தினேஷை அங்குள்ள லாரி மார்க்கெட் பகுதிக்கு மாரிமுத்து, ராகுல், முருகானந்தம் ஆகியோர் வரவழைத்துள்ளனர். நள்ளிரவில் 4 பேரும் மது அருந்தியுள்ளனர். போதை ஏறிய தினேஷை 3 பேரும் அருகில் ஒரு மறைவான இடத்திற்கு அழைத்து சென்று அவரது கைகளை கட்டி சரமாரியாக தாக்கி கத்தியால் வயிறு மற்றும் கைகளில் குத்தியுள்ளனர். மேலும், பிளாஸ்டிக் கயிற்றால் கழுத்தை நெரித்து தினேஷை கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
தகவலறிந்த புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி ரவீந்திரகுமார் குப்தா தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் போலீசார், தினேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நகர போலீசார் வழக்கு பதிந்து மாரிமுத்து, முருகானந்தம், ராகுல் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.
