டெல்லி: கடந்த 4 ஆண்டுகளில் ஏசி ரயில்களில் இருந்து சுமார் ரூ.104 கோடி மதிப்புள்ள போர்வைகள், துண்டுகள், தலையணை உறைகள் திருடப்பட்டு உள்ளதாக இந்திய ரயில்வே துறை தகவல் தெரிவித்து உள்ளது. பெரும்பாலும் டெல்லி, சோன்பூர், ஜோத்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ரயில் பெட்டிகளில் போர்வைகள் திருடப்பட்டு உள்ளன. ஏசி ரயில் பெட்டிகளில் பயணிகளின் வசதிக்காக வைக்கப்படும் போர்வைகள், துண்டுகள், தலையணை உறைகள் போன்ற பெரும்பாலான பொருட்களை பெரும்பாலும் ஏசி பெட்டிகளில் பயணித்தவர்களே திருடி இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் கடந்த 4 ஆண்டுகளில் 46.54 லட்சம் டவல்கள், 41.13 லட்சம் படுக்கை விரிப்புகள், 23.59 லட்சம் தலையணை உறைகள் என சுமார் 1.27 கோடி பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ.104.51 கோடி என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வெளியான விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் ஒவ்வொரு இரவும் சுமார் 8 லட்சம் ஏசி வகுப்புப் பயணிகள், பயணக் கட்டணத்திலேயே அடங்கிய படுக்கை விரிப்பு தொகுப்பை (2 விரிப்புகள், 1 போர்வை, 1 தலையணை, தலையணை உறை மற்றும் முகம் துடைக்கும் துண்டு) பயன்படுத்தி உறங்குகின்றனர். ஆனால் பயணம் முடிவடையும்போது, அவர்களில் சிலர் அதாவது ஒவ்வொரு 1,000 பயணிகளிலும் ஒருவர் வீதம் படுக்கை விரிப்புத் தொகுப்பில் உள்ள பொருட்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து கொண்டு சென்று விடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதே போல 2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டில் இந்த படுக்கை உபகரணங்கள் திருட்டு சம்பவங்கள் 56% அதிகரித்துள்ளன. அதே நேரம் தமிழகத்தின் திருச்சி மற்றும் கேரளாவின் பாலக்காடு ஆகிய தென்னக ரயில்வே கோட்டங்களில் ஒரு திருட்டு கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
