சேலம், ஜூலை 2: சேலத்தில் தரமான உணவு சமைக்க தவறிய விடுதி காப்பாளர், சமையலருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மூணாங்கரடு சமூக நீதி (கல்லூரி மாணவர்) விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு பட்டியல் படி தரமான உணவு வழங்கக்கோரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் கடந்த 30ம் தேதி மனு வழங்கப்பட்டது. மேலும் சமூக வலைதளங்களில் பரவிய புகார்களின் அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட விடுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நேரில் விசாரணை மேற்கொண்டார். அப்போது மதிய உணவாக உணவுப்பட்டியல்படி காய்கறி பிரியாணி, காய்கறி குருமா வழங்கப்பட்டுள்ளது.
இப்படி வழங்கப்பட்ட உணவுகள் குறித்து தணிக்கை செய்ததில் காய்கறி பிரியாணி அடியில் தீய்ந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. தரமாக உணவினை சமைக்க தவறிய சமையலர் சீனிவாசன், பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மல்லூரில் சமையலராக பணிபுரிந்து வரும் ராஜமாணிக்கம் மூணாங்கரடு மாணவர் விடுதிக்கு சமையலராக பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். மேலும் விடுதி காப்பாளர் உதயகுமார் மற்றும் சமையலர் சீனிவாசன் ஆகியோருக்கு தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு மேல்முறையீடு) விதி 17(ஏ)ன்படி விளக்கக்குறிப்பாணை (மெமோ) வழங்கப்பட்டுள்ளது.
