சேலம், ஜூன் 29:வணிக சிலிண்டர் விநியோகம் மீதான கட்டுப்பாடுகளை பெட்ரோலிய அமைச்சகம் நீக்கியுள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் வணிக சிலிண்டர் விநியோகம் சீராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலிண்டர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி ஓட்டல்களில் உணவுப்பொருட்களின் விலை ஏற்றப்பட்டது. அந்த உணவுப்பொருட்களின் விலையை மீண்டும் குறைக்க ஓட்டல் உரிமையாளர்கள் முன்வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. நடப்பாண்டு மார்ச்சில் மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக நம் நாட்டிற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் வீடுகளில் தடையின்றி சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய ஓட்டல்கள், ெதாழிற்சாலைகளுக்கு வணிக காஸ் சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டது. அடுத்த சில வாரங்களில் வணிக சிலிண்டர் விநியோகம் 20 சதவீதம், 50 சதவீதம் என படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் வணிக சிலிண்டருக்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் ஒன்றிய அரசு நீக்கியுள்ளது. வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி சில ஓட்டல்கள் விறகு அடுப்புக்கும், ராக்கெட் அடுப்புக்கும் மாறினர். ஒரு சில ஓட்டல்கள் தொடர்ந்து சிலிண்டர் பயன்படுத்தி உணவுப்பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
சிலிண்டர் விலை அதிகரிப்பு காரணம் காட்டி சிறிய ஓட்டல் முதல் பெரிய ஓட்டல்கள் வரை உணவுப்பொருட்களின் விலை 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,, வணிக சிலிண்டர் விநியோகம் மீதான கட்டுபாடுகளை பெட்ரோலிய அமைச்சகம் நீக்கியுள்ளது. அதனால் இனி வரும் காலங்களில் வணிக சிலிண்டர் விநியோகம் சீராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலிண்டர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி ஓட்டல்களில் உணவுப்பொருட்கள் ஏற்றப்பட்டது. அந்த உணவுப்பொருட்களின் விலையை மீண்டும் குறைக்க ஓட்டல் உரிமையாளர்கள் முன்வர வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அமெரிக்கா-ஈரான் போரால் இந்தியாவுக்கு வரவேண்டிய கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வீடு மற்றும் வணிக சிலிண்டர் உற்பத்தி பாதிக்கப்பட்டது. வணிக சிலிண்டர் விநியோகம் செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதேவேளையில் அதன் விலையும் அதிகரிக்கப்பட்டது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை காரணம் காட்டி ஓட்டல்களில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டது. இந்த விலை உயர்வு தினசரி ஓட்டல்களை நம்பி வாழ்வு நடத்துபவர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியது. அவர்களுக்கு வழக்கமான செலவுவை விட கூடுதல் செலவு ஏற்பட்டது.
இந்த நிலையில் வணிக சிலிண்டர் விநியோகம் மீதான கட்டுப்பாடுகளை பெட்ரோலியத்துறை அமைச்சகம் நீக்கியுள்ளது. அதனால் எதிர்வரும் நாட்களில் வணிக சிலிண்டர் விலை சீராக கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி ஏற்றப்பட்ட உணவுப்பொருட்களின் விலையை குறைக்க ஓட்டல் உரிமையாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்போதும் ஒரு பொருள் விலை உயர்வு ஏற்பட்டால், அந்த பொருள் தாராளமாக கிடைக்கும் போது விலையை குறைக்க வேண்டும். ஆனால் ஓட்டல், டீக்கடை, பேக்கரி, ரெஸ்டாரண்ட் உள்பட உணவுப்பொருட்கள் விற்பனை இடங்களில் ஏற்றப்பட்ட விலையை குறைப்பதில்லை. இது சம்பந்தமாக துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கடந்த பிப்ரவரி மாதத்தில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் என்ன விலை விற்கப்பட்டதோ, அதே விலையில் விற்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
