தவெக அமைச்சரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவரணியினர் சாலை மறியல்

 

சேலம், ஜூன் 30: சேலத்தில் தவெக அமைச்சரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவரணியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கைது செய்ய முயன்றபோது, கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொதுவெளியில் போதை பொருளை பயன்படுத்திய தவெக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் நேற்று திமுக மாணவரணியினர் போராட்டம் நடத்தினர். சேலத்தில் திமுக மாணவரணி சார்பில் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதன்பேரில் நேற்று காலை 10 மணிக்கு கோட்டை மைதானத்தில், திமுக மாணவரணி நிர்வாகிகள் திரண்டனர்.

அவர்களிடம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் வந்து, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளர்கள் கோகுல்காளிதாஸ் (மத்தியம்), கண்ணன் (மேற்கு), சீனிவாசன் (கிழக்கு) ஆகியோர் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போதை பொருள் பயன்படுத்திய அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், தவெக ஆட்சியில் போதை பொருள் கலாசாரம் அதிகரித்திருப்பதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட திமுகவினரை அப்புறப்படுத்த முயன்றனர்.

அதில், போலீசாருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து குண்டு கட்டாக மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றினர். இதில், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண்பிரசன்னா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் சரவணன், நிர்வாகிகள் வேங்கையன், முகேஷ், சிவசங்கரன், சிலம்பரசன், கார்த்தி, சிவராஜ், வெங்கடேஷ், சுகைல் ரகுமான் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த திமுக மாணவரணியினரை சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்பி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்பி ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், சிறுபான்மை அணி அன்வர், கொண்டலாம்பட்டி மண்டலக்குழு தலைவர் அசோகன், திமுக பகுதி செயலாளர்கள் ஏ.எஸ்.சரவணன், இப்ராகீம், மணமேடு மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: