சேலம் மாநகராட்சி கூட்டத்தில் குடிநீர் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க கவுன்சிலர்கள் எதிர்ப்பு

 

சேலம், ஜூன் 30: சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டத்தை, தனியார் வசம் ஒப்படைக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக மேயர் தெரிவித்தார். இதை தொடர்ந்து ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மாநகராட்சியில், மாமன்ற கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் லலித் ஆதித்ய நீலம், துணை மேயர் சாரதாதேவி முன்னிலை வகித்தனர். திமுக கவுன்சிலர்கள், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படத்தை கூட்ட அரங்கத்துக்குள் வைக்க வேண்டும் என கூறி புகைப்படத்துடன் வந்தனர். இதேபோல் அதிமுக கவுன்சிலர்கள் எடப்பாடி பழனிசாமி படத்தையும், துணை மேயர் சாரதாதேவி காமராஜர் படத்தையும் மன்ற கூடத்தில் வைக்குமாறு கூறி படத்துடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் படங்களை மாட்டினர்.

சுஹாசினி(திமுக): எனது வார்டில் அரசு பள்ளிக்கு அருகில் 300 மீட்டருக்குள் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். இதற்காக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று மேயர் முன் தரையில் அமர்ந்தார். பிறகு அவரது கோரிக்கை மீது உரிய நடவடிக்கை மேற்ெகாள்ளப்படும் என மேயர் தெரிவித்தார். இதையடுத்து அவர் இருக்கைக்கு சென்றார். இமயவரம்பன்(விசிக): சேலம் மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை, தனியாருக்கு தாரை வார்த்த தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி பல முறை மனு கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்ைல. மேயர்: அது அரசு ஆணை. உடனடியாக ரத்து செய்ய முடியாது.

துணை மேயர் சாரதாதேவி: தனியாருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆனால் அது ரத்து செய்யப்படவில்லை. மேயர் அருகில் போடப்பட்டிருந்த தனது இருக்கையை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதை கண்டித்து வெளிநடப்பு செய்தார். குணசேகரன் (திமுக): துப்புரவு மேற்பார்வையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் வார்டில் பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களது இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். தற்போது தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வார்டுகளில் குப்பைகள் அதிக அளவில் தேங்கியுள்ளது. முறையாக அவர்களை அழைத்து பேச வேண்டும். குடிநீரை சீராக வழங்க வேண்டும்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய திமுக, அதிமுக கவுன்சிலர்கள் தனியாருக்கு தாரை வளர்க்கும் குடிநீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மேயரை வலியுறுத்தினர். உடனே மேயர், கமிஷனரிடம் ஆலோசித்தார். பின்னர், மேயர், தனியாருக்கு வழங்கும் குடிநீர் திட்டத்தை ரத்து செய்யலாமா என கேட்டார். கவுன்சிலர்கள், இந்த திட்டத்தை ரத்து செய்யுங்கள் என தெரிவித்தனர். மேயர்: தனியாருக்கு வழங்கும் குடிநீர் திட்டம் ரத்து என்று அறிவிக்கிறேன். ஈசன் இளங்கோ (திமுக): எனது வார்டை குப்பையில்லா வார்டாக மாற்றி வருகிறேன். வார்டில் உள்ள தூய்மை பணியாளர்கள் நல்ல முறையில் பணியாற்றி வருகின்றனர். இதனால் துப்புரவு மேற்பார்வையாளர் இடமாற்றம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். அதிமுக, திமுக கவுன்சிலர்கள் துப்புரவு மேற்பார்வையாளர் இடமாற்றத்தை ரத்து செய்ய கமிஷனரிடம் வலியுறுத்தினர்.

மேயர்: துப்புரவு மேற்பார்வையாளர் இடமாற்றத்தை ரத்து செய்வது பரிசீலிக்கப்படும் என கமிஷனர் தெரிவித்துள்ளார் என கூறினார். கலையமுதன்(திமுக): சூரமங்கலம் மண்டலத்தில் 10 கவுன்சிலர்கள் கையெழுத்து போட்டு வருவாய் ஆய்வாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எப்போது அந்த வருவாய் ஆய்வாளர் மாற்றப்படுவார். மேயர்: உடனே வருவாய் ஆய்வாளர் மாற்றப்படுவார். கூட்டம் நடந்த போது, மாமன்றத்திற்குள் இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் வந்து நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த மேயர், அவர்களை வெளியே அனுப்புமாறு போலீசாருக்கு அறிவுறுத்தினார். உடனே போலீசார் மாமன்றத்தில் இருந்து அவர்களை வெளியேற்றினர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

சரவணன்(திமுக): அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் மீட்டிங்கில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதனால் மீட்டிங்கை மாலை நேரத்தில் நடத்த வேண்டும். காலையில் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். மண்டல அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் பற்றாக்குறையாக உள்ளது. அதை நிவர்த்தி செய்ய வேண்டும். உமாராணி(திமுக): போதை கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் இந்த சோபா மாடல் ஆட்சியை இந்த மாமன்றம் கண்டிக்கிறது. போதை மருந்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சரை கைது செய்யவேண்டும். அசோகன்(திமுக): மண்டலத்தில் எந்த வேலையும் நடைபெறவில்லை. அதிகாரிகள் பணிகளை செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை.

யாதவமூர்த்தி(அதிமுக): மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரியில் 30க்கும் மேற்பட்டவர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். அவர்கள் மீது போலீசில் புகார் அளித்து அகற்ற வேண்டும். இதை தொடர்ந்து தமிழரசன் (திமுக) 7வது தீர்மானத்தை நிறுத்தி வைப்பதாகவும், தனியாருக்கு வழங்கும் குடிநீர் திட்டத்தை ரத்து செய்வதாகவும் அறிவித்து, மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார். கூட்டம் முடிந்ததும், திமுக கவுன்சிலர்கள், மாமன்றத்திற்கு வெளியே, போதை விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் சரத்குமாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: