சென்னை: இஸ்லாமியர்களின் இடஒதுக்கீடு தொடர்பான நீதிமன்ற தீர்ப்புக்கு, தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு 3.5% பிசிஎம் இடஒதுக்கீட்டை செல்லாததாக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் அணுகுமுறை, சமூக உண்மைகளையும் அரசியல் சட்டப் பாதுகாப்புகளையும் மறுக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உயர் நீதிமன்றத்தின் பெரிய அமர்விற்கு மேல்முறையீடு செய்து, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பாதுகாக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
எஸ்டிபிஐ கட்சி தலைவர் முகமது முபாரக்: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை 3.5 சதவித இடஒதுக்கீட்டை ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு, சமூக நீதியைக் காக்கும் பொருட்டு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். சிறந்த மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையையும், அரசாணை எண் 31-ன் சட்டப்பூர்வ தன்மையையும் நிலைநாட்ட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஜீபுர் ரஹ்மான்: இஸ்லாமிய மதத்திற்கு மாறுபவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு சலுகையை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஆளும் தவெக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள், இஸ்லாமிய சமூகம் நீண்டகாலமாகப் போராடிப் பெற்ற உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அமையவில்லை என்பதும் வேதனைக்குரியது.
இந்த முக்கியமான தீர்ப்பு குறித்து இதுவரை ஆளும் தவெக அரசும், இந்த அரசில் நேரடியாகவும் வெளியிலிருந்தும் அங்கம் வகிக்கும் விசிக, ஐயுஎம்எல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, இவ்வழக்கை உரிய முறையில் கையாளத் தவறியதால் இஸ்லாமியர்களின் முக்கியமான இடஒதுக்கீட்டு உரிமை பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை நீக்கும் வகையில், தமிழக அரசு உடனடியாக இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து, இஸ்லாமியர்களின் அரசியலமைப்புச் சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
