சென்னை, திருவள்ளூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை, திருவள்ளூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக வெயிலின் தாக்கம் சற்றுக் குறைந்து இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் வரை உயர்ந்தும், ஏனைய பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது.

குறிப்பாக, நேற்று தமிழகத்தில் திருத்தணி, திருச்சி, கடலூர், கரூர் பரமத்தி, சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், நாமக்கல், வேலூர், பாளையங்கோட்டை, மதுரை நகரம், மதுரை விமான நிலையம், நாகை, தஞ்சை ஆகிய 13 இடங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்தது. அதிகபட்சமாக திருத்தணி, திருச்சி பகுதியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதேநேரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை கன மழை பெய்தது. அதேபோல் தமிழகத்தில் மேலும் சில பகுதிகளில் மழை பெய்தது.

மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து மத்திய மகாராஷ்டிரா வரை வடக்கு தெலங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மராத்வாடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் வழியாக சுமார் 3.1 கிமீ முதல் 4.5 உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இன்று தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூரின் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

வரும் 1ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Related Stories: