சென்னை: போலி ரசீதுகளை தயாரித்து கோயில் நிதியை கையாடல் செய்த வழக்கில் கோயில் ஊழியர்கள் 3 பேர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவெட்டாறு அரிகேசபெருமாள் கோயிலில் சுசீந்திரம் இந்து சமய அறநிலையத் துறையின் அப்போதைய துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக பணியாற்றிய புகழேந்திரன் 2004 முதல் 2006 வரை கோயில் திருவிழா மற்றும் படித்தரம் செலவுகளுக்காக போலி ரசீதுகள் மற்றும் ஆவணங்களை தயாரித்து ரூ.2,96,017 கோயில் நிதியை கையாடல் செய்ததாக புகார் வந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரித்து வழக்கு பதிவு செய்து 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த கோயில் காசாளர் குத்தாலம், சிறப்பு காவலாளி ரமேஷ்குமார், இளநிலை ஊழியர் மோகன்குமார் ஆகிய அறநிலையத்துறை ஊழியர்கள் தங்கள் மீதான குற்றவியல் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, மனுதாரர்களுக்கு எதிராக எந்தவித வாய்மொழி அல்லது ஆவண ஆதாரமும் இல்லை. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கின் ஆவணங்களின்படியே முதல் குற்றவாளிதான் போலி ரசீதுகள் மற்றும் ஆவணங்களை தயாரித்துள்ளார். மனுதாரர்கள் கோயில் நிதியை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு இல்லை.
கோயில் காசாளர் குத்தாலம் காசோலைகளை பணமாக மாற்றி முதல் குற்றவாளியிடம் ஒப்படைத்துள்ளார். மற்ற இருவரும் முதல் குற்றவாளியின் அறிவுறுத்தலின்படி ஆவணங்களில் கையெழுத்திட்டனர். இதை தவிர சதி, முறைகேடு அல்லது நிதி கையாடலில் அவர்கள் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே, இவர்களை விசாரணைக்கு உட்படுத்துவது நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துவதாகும் என்று வாதிட்டார்.
இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகையில் உள்ள ஆதாரங்கள் விசாரணையை தொடர போதுமானவை என்றும், அனைத்து தரப்பினரின் பங்கும் விசாரணையில்தான் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, வழக்கில் உள்ள சாட்சிகளின் வாக்குமூலங்களின்படி போலி ரசீதுகள் மற்றும் ஆவணங்களை முதல் குற்றவாளிதான் தயாரித்துள்ளார். மனுதாரர்கள் மீது குறிப்பிட்ட குற்றச்செயலை நிரூபிக்கும் வாய்மொழி அல்லது ஆவண ஆதாரம் எதுவும் இல்லை.
ஆவணங்களில் கையெழுத்திட்டிருப்பது மட்டுமே அவர்களை குற்றவாளிகளாக கருத போதுமானதல்ல. அவர்களை தொடர்ந்து குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்துவது நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துவதாக அமையும். மனுதாரர்கள் 3 பேர் மீதான குற்றவியல் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. மற்றவர்கள் மீதான விசாரணையை சட்டப்படி விசாரணை நீதிமன்றம் தொடரலாம் என்று உத்தரவிட்டார்.
