சென்னை: உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கான தேர்வு முடிவில் குளறுபடிகள் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் நீண்ட நாட்களாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர் நியமனம் இல்லாதிருந்த நிலையில், 61 பாடங்களுக்கு, 2708 உதவிப்பேராசிரியர் நியமனங்களுக்கு, 27.12.2025 அன்று எழுத்துத் தேர்வு நடந்தது. நியமனங்கள் குறைவாக இருந்த, 5 பாடப்பிரிவுகளுக்கு மட்டும் 25.2.2026 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு பணி நியமனங்கள் நடந்தன.
மீதமிருந்த 56 பாடங்களுக்கு 25.6.2026 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. விவரித்து எழுதுதல் கேள்விக்கான மதிப்பெண் வழங்கியதில் பெருமளவில் குளறுபடிகள் நடைபெற்றதாக பரவலாக சொல்லப்படுகிறது. முதல் தாளின் இரண்டாம் பகுதி தேர்வுக்கான 150 மதிப்பெண்களும், இரண்டாம் தாளின் 50 மதிப்பெண்கள் என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு, இட ஓதுக்கீடு பிரிவினராக இருந்தால் 35%, இட ஓதுக்கீடு அல்லாத பிரிவினராக இருந்தால் 40% மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே தகுதியுடையவர்களாவர்கள் என்றும் இவர்களில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது வெளியான தேர்வு முடிவுகளில், விவரித்து எழுதுதல் கேள்விக்கு பூஜ்யம் உள்ளிட்ட மிக்குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுஎழுந்துள்ளது. இதற்கு உரிய விளக்கங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வழங்க வேண்டும் என கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
