12 மாநகராட்சிகளின் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து: கடும் எதிர்ப்புக்கு பணிந்தது தவெக அரசு

சென்னை: தூய்மை பணியாளர்களின் போராட்டத்துக்கு பணிந்த தவெக அரசு, 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டரை ரத்து செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் சார்பில், திட்ட மேம்பாட்டு மானிய நிதி திட்டத்தின் கீழ், கடந்த 20ம் தேதி 3 தொகுப்புகளாக தனியார் பங்களிப்புடன் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் வகையில் டெண்டர் அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஆவடி, ஓசூர், தாம்பரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய 12 மாநகராட்சிகளில் குப்பையை சேகரித்தல், பிரித்தல், குப்பை கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட தூய்மை பணிகளை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளும் திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே தூய்மை பணியாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது நிரந்தர பணியாளர்களின் வேலைவாய்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ஒப்பந்த முறையில் பணிபுரிபவர்களின் ஊதியம், பணி பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு உரிமைகள் மேலும் பாதிக்கப்படும் என்றும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களையும், கூட்டணி கட்சியினர் கண்டனங்களை தெரிவித்தனர்.

மேலும், அரசு முதலில் தூய்மை பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளான பணி நிரந்தரம், காலமுறை ஊதிய உயர்வு, பாதுகாப்பு உபகரணங்கள், மனிதநேயமான மற்றும் கண்ணியமான பணிச்சூழல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்பதே தொழிலாளர் அமைப்புகளின் வலியுறுத்தலாக இருந்தது. இதற்கு மாறாக, தனியார் நிறுவனங்களின் நவீன இயந்திரங்கள் மற்றும் மேலாண்மை திறனை பயன்படுத்தி நகரங்களின் சுகாதார தரத்தை உலக தரத்திற்கு உயர்த்துவதே திட்டத்தின் நோக்கம் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், இந்த விளக்கத்தை தொழிலாளர் அமைப்புகள் ஏற்க மறுத்து, இது தொழிலாளர் நலன்களுக்கு எதிரான அணுகுமுறை என விமர்சித்தன. இதற்கிடையே கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் குப்பை மேலாண்மை பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போது, தூய்மை பணியாளர்கள் தங்களின் பணி பாதுகாப்பு மற்றும் ஊதிய குறைப்பு போன்ற காரணங்களை முன்வைத்து ரிப்பன் மாளிகை முன் தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை பனையூரில் தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து போராட்டத்திற்குத் தனது ஆதரவை வழங்கினார் தவெக தலைவர் விஜய்.

ஆனால், ஆட்சி பொறுப்பேற்ற 40 நாட்களுக்குள் தமிழ்நாட்டின் மிக முக்கியமான 12 மாநகராட்சிகளின் தூய்மை பணியை மேற்கொள்வதற்கு தனியாரிடம் டெண்டர் கோரி இருப்பது தனியார்மயமாக்கலில் தவெக அரசு எந்த அளவிற்கு தீவிரமாக இருக்கிறது என்பதற்கும் தொழிலாளர் விரோத கொள்கைகளை கொண்டிருக்கிறது என்பதற்குமான சான்றாகும் என தொடர் போராட்டங்களில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார்மயமாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டிருந்த சாத்தியக்கூறு ஆய்வுக்கான டெண்டர் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என தெரிவிக்கப்படவில்லை. மேலும் 12 மாநகராட்சிகளின் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முற்றிலும் கைவிடப்படுமா அல்லது மாற்றியமைக்கப்பட்ட வடிவில் மீண்டும் கொண்டு வரப்படுமா என்பது குறித்து அரசு இதுவரை விரிவான விளக்கம் அளிக்கவில்லை.

இந்த நடவடிக்கை எதிர்ப்பின் விளைவாக எடுக்கப்பட்ட முடிவா என்பது குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் அரசின் விரிவான விளக்கத்தை தொழிலாளர் அமைப்புகள் எதிர்பார்த்து வருகின்றன. ஆனாலும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்துக்கு தவெக அரசு பணிந்து டெண்டரை ரத்து செய்துள்ளதாக பல்வேறு சங்கங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளன. மேலும், தூய்மைப் பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவித்து அரசு ஊழியர்களைப்போல எல்லாவிதமான பயன்களையும் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

* 12 மாநகராட்சிகளின் தூய்மை பணியை மேற்கொள்வதற்கு தனியாரிடம் டெண்டர் கோரி இருப்பது, தனியார்மயமாக்கலில் தவெக அரசு எந்த அளவிற்கு தீவிரமாக இருக்கிறது என்பதற்கும், தொழிலாளர் விரோத கொள்கைகளை கொண்டிருக்கிறது என்பதற்குமான சான்றாகும், என தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Related Stories: