விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சிலம்பம் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருக்கும், தனித்திறன் வாய்ந்த மாணவியருக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழா மேடைக்கு பின்புறம் வைக்கப்பட்டிருந்த பேனரில் முதலில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் பெயரும், அதன்கீழ் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இதை கவனித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, அங்கிருந்த அதிகாரிகளை அழைத்து, ‘எனது துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி இது. புரோட்டக்கால்படி முதலமைச்சர் பெயருக்கு பின் எனது பெயர் இடம் பெற வேண்டும். இதை பலமுறை சொல்லிவிட்டேன். மீண்டும் மீண்டும் தவறு செய்கிறீர்கள்’ என கோபப்பட்டார். உடனே அருகில் இருந்த கலெக்டர் சுகபுத்ரா, ‘இனிமேல் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வோம் மேடம்’ என அவரை சமாதானப்படுத்தினார். இதனால், விழா மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் கீர்த்தனா ஒரு கோஷ்டியாகவும், அமைச்சர் ஜெகதீஸ்வரி ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர். ஜெகதீஸ்வரி ஆரம்ப காலம் முதல் விஜய் ரசிகர் மன்ற பொறுப்பில் இருந்து, தற்போது அமைச்சர் பதவி வரை உயர்ந்துள்ளார். ஆனால் அமைச்சர் கீர்த்தனா பாஜ ஆதரவாளராக இருந்து, தேர்தலுக்கு 30 நாட்களுக்கு முன்பு திடீரென தவெகவில் சேர்ந்து, அமைச்சர் பதவியை பிடித்துள்ளார்.
இது விஜய் ரசிகர் மன்றத்தில் பலகாலம் உழைத்த அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கும், தவெக மாவட்ட செயலாளர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. எனவே தவெக மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமையில் கீர்த்தனாவிற்கு எதிராக தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் அரசு விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகளில் இரண்டு அமைச்சர்களின் ஆதரவாளர்கள் மோதுவது வாடிக்கையாகி வருகிறது.
இதன் உச்சக்கட்டமாக சமீபத்தில் அமைச்சர் கீர்த்தனாவின் சிவகாசி தொகுதியில் நடந்த விஜய் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஜெகதீஸ்வரி, கட்சி தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்து, ‘உங்களுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வத்திடம் சொல்லுங்கள்’ என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தற்போது அரசு விழாவிலேயே அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக அமைச்சர் ஜெகதீஸ்வரி கொந்தளித்து பேசியது தவெக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* அமைச்சர் திடீர் அட்மிட்
அமைச்சர் ஜெகதீஸ்வரி, விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதுகுறித்து அருகில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெய்சிங்கிடம் தெரிவித்தார். பின்னர் அமைச்சருக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அவருக்கு எக்கோ, இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அமைச்சரின் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரித்ததே உடல்நல பாதிப்புக்கு காரணம் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது. சுமார் 2 மணி நேர தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்கு பிறகு அமைச்சரின் உடல்நிலை சீரடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
